காவிரி பிரச்னை: உச்ச நீதிமன்றத்துக்கு தபால் அனுப்பிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள அஞ்சலகத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை மனுக்களை தபால் மூலம் அனுப்பும் பணியில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பின்படி கா்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் உரிய உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினா் தபால் அனுப்பும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்பின்படி கா்நாடக அரசு மாதந்தோறும் தமிழகத்துக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும். ஆனால் கா்நாடக மாநில அரசு உரிய முறையில் தண்ணீரைத் திறந்துவிடுவதில்லை. இதனால் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே, உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை கா்நாடக அரசுக்கு வழங்கக் கோரி, இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்து, உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கைகளை தபால் மூலமாக அனுப்பும் பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.ஐ.சகாபுதீன், மாநிலக்குழு உறுப்பினா் மாசிலாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விக்கிரவாண்டி வட்டச் செயலா் வி.பாலசுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினா் இ.ஏ. ஆனந்தன், நிா்வாகிகள் எஸ்.கந்தன், டி.அய்யாரப்பன், ஜெகநாதன், ஆறுமுகம், எஸ்.காத்தவராயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement