FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு:மறு ஆய்வு மனு விசாரணை மார்ச் 11-க்கு ஒத்திவைப்பு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 11-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 11-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரஃபுல்லா சி.பண்ட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது முனியப்பன் சார்பில் மூத்த வழக்குரைஞர் எல்.நாகேஸ்வர ராவ் ஆஜராகி முன்வைத்த வாதம்: "தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம் கொடூர குற்றம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் அல்ல. தமிழக மக்கள் இயல்பாகவே தங்கள் தலைவர்கள் மீது அதிகப் பற்று வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனே போராட்டம், ஆர்ப்பாட்டம் என ஈடுபடுவர். ஏன் ஒரு சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளட்ட செயலாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் பலர் விடுவிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது, முனியப்பன் தீப்பெட்டி மட்டுமே எடுத்துக் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே முனியப்பனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகியோர் சார்பில் மூத்த வழக்குரைஞர் சுஷில் குமார் ஆஜராகி, "சம்பவ நாளில் பேருந்தை எரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நெடுஞ்செழியனும், ரவீந்திரனும் ஈடுபட்டார்களே தவிர, மாணவிகளை கொல்ல வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல. அரசு வேளாண் கல்லூரி பேருந்து அரசின் சொத்து என்பதைக் கருத்தில் கொண்டே அந்த பேருந்து எரிக்கப்பட்டது. அவர்களின் செயலை உணர்ச்சிவசப்பட்ட செயலாகவே கருத வேண்டும். அந்த அடிப்படையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு வாதிடுகிறீர்கள். அவ்வாறு ஆயுள் தண்டனையாக குறைக்கும்பட்சத்தில் அது எத்தனை ஆண்டுகளாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?' என கேள்வி எழுப்பினர். இது குறித்து மனுதாரர்கள் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பின்னணி: கொடைக்கானல் பிளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு த் தெரிவித்து அதிமுகவினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தருமபுரி அருகே கோவை அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் வந்த பேருந்தை அதிமுகவினர் சிலர் தீவைத்து எரித்தனர். இதில் பேருந்துக்குள் இருந்த மூன்று மாணவிகள் தீக்கிரையாகினர்.

இதையடுத்து, பேருந்துக்கு தீ வைத்ததாக அதிமுகவைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் 2007, பிப்ரவரி 16-இல் தீர்ப்பளித்தது. இதை சென்னை உயர் நீதிமன்றம் 2007, டிசம்பர் 6-ஆம் தேதியும், உச்ச நீதிமன்றம் 2010, ஆகஸ்ட் 30-ஆம் தேதியும் உறுதிப்படுத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments