FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாணவரிடம் செல்லிடப்பேசி,  மடிக்கணினியை திருடி நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற சிறார் கைது

செல்லிடப்பேசி, மடிக் கணினிகளைத் திருடிவிட்டு அவற்றைத் திருப்பித் தர தனது செல்லிடப்பேசி மொபைல் வாலெட்டுக்கு பணத்தை

30 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

செல்லிடப்பேசி, மடிக் கணினிகளைத் திருடிவிட்டு அவற்றைத் திருப்பித் தர தனது செல்லிடப்பேசி மொபைல் வாலெட்டுக்கு பணத்தை அனுப்புமாறு மாணவரிடம் கூறி நூதன முறையில் பணம் பறித்து வந்த 17 வயது சிறாரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து தென் மேற்கு காவல் சரக துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்ததாவது: 
வசந்த் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ரஜ்னிஷ். இவர் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளுக்காக படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கியிருந்த அறையில் இருந்து செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணினி காணாமல் போனது. இதையடுத்து, ரஜ்னிஷுக்கு ஒரு மர்ம நபரிடமிருந்து செல்லிடப்பேசியில் குறுந்தகவல் வந்தது. 
அதில், ரஜ்னிஷின் காணாமல் போன செல்லிடப்பேசி, மடிக் கணினி பத்திரமாக இருப்பதாகவும், தனது மொபைல் வாலெட்டில் ரூபாய் 10 ஆயிரம் பணம் செலுத்தினால் அவை திருப்பி ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. 
மேலும், அவ்வாறு பணத்தை செலுத்தாவிட்டால் தேர்வு எழுதுவதற்காக மடிக் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள படிப்பு சார்ந்த தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும் என்றும் குறுந்தகவலில் மிரட்டல் தொனியில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து வசந்த் விஹார் காவல் நிலையத்தில் ரஜ்னிஷ் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். 
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ரஜ்னிஷுக்கு குறுந்தகவல் அனுப்பிய மர்ம நபர் வடக்கு தில்லியில் உள்ள மஜ்னு கா டிலா பகுதிக்கு ஒருவரை சந்திக்க வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் 17 வயதுடைய சிறார் எனத் தெரிய வந்தது. அவரிடமிருந்து செல்லிடப்பேசி மற்றும் மடிக் கணினி மீட்கப்பட்டது. மேலும், வேறு சில திருட்டு மடிக் கணினிகள், செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன.
திருட்டில் ஈடுபடுவதற்கு முன்பு தனிப் பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று நோட்டம் விட்டு அதன் பின்னர் மின்னணு சாதனங்களை சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து சிறார் திருடியிருப்பதும், அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. 
கைதான சிறார், சிறுவர் நீதிசார் வாரியம் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல் துணை ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments