"அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது பொதுக்குழு': இரட்டை இலைச் சின்னம் வழக்கில் செம்மலை தரப்பு வாதம்
அதிமுகவின் பொதுக்குழு அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று
அதிமுகவின் பொதுக்குழு அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இரட்டை இலைச் சின்னம் வழக்கில் அதிமுக மூத்த தலைவர் செம்மலை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் 4-ஆவது எதிர் மனுதாரரான செம்மலை சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி, "இந்த வழக்கில் பெரும்பான்மை யாருக்கு உள்ளது என்பதை பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அதிமுகவில் கிளை, வட்டம், நகரம், ஒன்றியம், மாவட்டம் உள்ளிட்ட அளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலிருந்துதான் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களிலும், கட்சியிலும் எங்கள் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க அடிப்படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்' என்றார்.
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. அந்த உத்தரவை செல்லாதென அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.