FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தளி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றம் 

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஓசூர் நீதிமன்றத்திலிருந்து

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஓசூர் நீதிமன்றத்திலிருந்து சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை தாலுகா , நாகமங்கலத்தைச் சேர்ந்த என்.சி. சந்திரசேகரன் 1995-ஆம் ஆண்டு ஓசூர் பேருந்து நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸ்வதி அம்மாள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் இந்திரா ஜெயசிங், கோபால் சங்கர நாராயணன் வழக்குரைஞர் கே. பாரிவேந்தன், ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், சஞ்சய் ஆர். ஹெக்டே உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர்.
விசாரணையின்போது, மனுதாரர் சரஸ்வதி அம்மாள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் இந்திரா ஜெயசிங், கோபால் சங்கர நாராயணன் வாதிடுகையில், "இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தளி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான ராமச்சந்திரனுக்கு எதிராக 14 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சியங்களை மிரட்டி வருகிறார். 
ராமச்சந்திரனுக்கு எதிரான வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2017, ஜூன் 16-ஆம் தேதி உத்தரவிட்டும், விசாரணை நிறைவடையவில்லை. 
ஓசூர் கூடுதல் செஷனஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையை, சேலம் முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அப்போதுதான் நியாயமான விசாரணை நடைபெறும்' என கேட்டுக் கொண்டனர்.
அப்போது, "எதிர் மனுதாரர் ராமச்சந்திரன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், சஞ்சய் ஆர். ஹெக்டே ஆகியோர் முன் வைத்த வாதத்தில், "ராமச்சந்திரன் தற்போது எம்எல்ஏவாக இல்லை. சாட்சியங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எனவே, வழக்குகளின் விசாரணையை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யத் தேவையில்லை' என்றனர்.
 தமிழகக் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா, "சென்னை உயர் நீதிமன்ற உத்ததரவுக்குப் பிறகு மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரனுக்கு எதிரான இரு வழக்குகளிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்துள்ள தீர்ப்பின் விவரம்:
இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டோம். இந்த வழக்கு தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் 19 சாட்சியங்களில் 13 சாட்சியங்கள் பிறழ்சாட்சியங்களாக மாறியுள்ளனர். 
அதில் 9 பேர் அரசு அதிகாரிகள். வழக்கில் தொடர்புடைய ராமச்சந்திரன் 15 கிராமங்களில் செல்வாக்கு படைத்தவர் என அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை நடைபெற விசாரணையை வேறொரு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. ஓசூர் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணையை சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். 
எந்தவிதமான தலையீடும் இன்றி விசாரணையை விரைவாக நடத்தி முடிப்பதை சேலம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்' எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments