காற்றின் வேகம் குறைந்ததால் மிகவும் மோசமான பிரிவில் காற்றின் தரம்!
காற்றின் வேகம் குறைந்ததாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்ததாலும் தில்லியில் காற்றின் தரம்
காற்றின் வேகம் குறைந்ததாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்ததாலும் தில்லியில் காற்றின் தரம் "மிகவும் மோசம்' எனும் பிரிவில் தொடர்ந்து நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீட்டு அளவு 322 ஆக பதிவாகி இருந்தது. இது மிகவும் மோசம் எனும் பிரிவின் கீழ் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிப்பு மற்றும் மழைப் பொழிவுக்குப் பிறகு காற்றின் மாசுபடுத்திகள் பிடித்து வைத்திருக்கும் திறன் அதிகரித்ததன் காரணமாக காற்று மாசு தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
மழையின் தாக்கம் இல்லாததால் தில்லியில் காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் இருப்பதாக மத்திய அரசின் அமைப்பான காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) தெரிவித்துள்ளது. தில்லியில் திங்கள்கிழமை 14 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் எனும் பிரிவிலும், 14 இடங்களில் மோசம் எனும் பிரிவில் இருப்பதாகப் பதிவாகியிருந்தது. காற்றில் பி.எம். 2.5 நுண்துகள் அளவு 167 ஆகவும், பி.எம். 10 நுண்துகள் அளவு 307-ஆகவும் பதிவாகியிருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51 முதல் 100 வரை இருந்தால் "திருப்தி' எனும் பிரிவிலும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201 முதல் 300 வரை மோசமான பிரிவிலும், 301 முதல் 400 வரையில் இருந்தால் மிகவும் மோசமான பிரிவிலும், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.
இதுகுறித்து காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (சஃபர்) அதிகாரி கூறுகையில், "காற்றின் வேகம் மிதமாகவும், அதிக ஈரப்பதத்துடனும் இருப்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படும் சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டில் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக சுற்றுச்சூழல் மாசுத் தடுப்பு கட்டுப்பாட்டு ஆணையம் தலைவர் புரே லால் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.