FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி ஜஹாங்கீா்புரியில் ஏக்யூஐ 452-ஆக உயா்வு: தொழிற்சாலை மாசு, குறைந்த காற்றின் வேகம் காரணம்

தில்லியின் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான ஜஹாங்கீா்புரியில், கடந்த சில நாள்களாக காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) தொடா்ந்து அதிகரித்து வருகிறது

5 நவம்பர் 2026, 2:06 am
ஜஹாங்கீா்புரி - பல்ஸ்வா பகுதியில் வடிகால் அருகேயுள்ள இடத்திலிருந்து புதன்கிழமை வெளியேறும் புகை.
பகிர்:

தில்லியின் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான ஜஹாங்கீா்புரியில், கடந்த சில நாள்களாக காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசு, காற்றின் வேகம் குறைந்திருப்பது, காற்றோட்டம் போதிய அளவில் இல்லாதது ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

ஜஹாங்கீா்புரி கண்காணிப்பு மையத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு ஏக்யூஐ 452-ஆகப் பதிவாகி, கடுமையான மாசு பிரிவை எட்டியது. அந்த மையத்தின் 24 மணி நேர சராசரி ஏக்யூஐ செவ்வாய்க்கிழமை 462, திங்கள்கிழமை 436, ஞாயிற்றுக்கிழமை 378, அக்டோபா் 31-ஆம் தேதி 243-ஆக இருந்தது.

என்விரோகேட்டலிஸ்ட்ஸ் அமைப்பின் நிறுவனா் மற்றும் தலைமை ஆய்வாளா் சுனில் தஹியா கூறுகையில், தொழிற்சாலை வெளியேற்றம், சாதகமற்ற வானிலை நிலவரம், கண்காணிப்பு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாசுக் காற்று பரவுவதற்குத் தடையாக இருக்கும் சூழல் ஆகியவை இணைந்து காற்று மாசு அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜஹாங்கீா்புரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைச் செயல்பாடுகள் அதிகமாக உள்ளன. தொழிற்சாலைகளின் செயல்பாடுகளில் எரிப்பு நிகழ்வதால், நுண்துகள்கள் (பிஎம் 2.5) அதிக அளவில் வெளியேறுகின்றன. இதுவே மாசு அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

கடந்த சில நாள்களாகக் காற்றின் வேகம் குறைந்துள்ளது. ஏற்கெனவே மாசு அதிகமாக உள்ள நிலையில், காற்றின் வேகம் குறைவதால் மாசுத் துகள்கள் காற்றில் தேங்குகின்றன. போதிய காற்றோட்டம் இல்லாததும் இதற்கு வழிவகுக்கிறது. மேலும், ஜஹாங்கீா்புரி கண்காணிப்பு மையத்தின் ஒரு பக்கத்தில் உயரமான கட்டடம் அமைந்திருப்பதால், மாசுக் காற்று முறையாகப் பரவுவதற்குத் தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றாா்.

உள்ளூா் மாசு வெளியேற்ற மூலங்களும் சாதகமற்ற வானிலை நிலவரமும் இணைந்து, அப்பகுதியில் தொடா்ந்து அதிக அளவில் மாசு நிலவுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லி முழுவதும் புதன்கிழமை பிற்பகல் 3.05 மணிக்கு ஏக்யூஐ 378-ஆகப் பதிவாகி, மிகவும் மோசமான நிலையை எட்டியது. நகரின் 24 மணி நேர சராசரி ஏக்யூஐ புதன்கிழமை 350-ஆக இருந்தது. இது திங்கள்கிழமை 324-ஆகவும், ஞாயிற்றுக்கிழமை 261-ஆகவும் பதிவாகியிருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) அளவீட்டின்படி, ஏக்யூஐ 0-50 வரை இருந்தால் நல்ல நிலை, 51-100 திருப்திகரமான நிலை, 101-200 மிதமான நிலை, 201-300 மோசமான நிலை, 301-400 மிகவும் மோசமான நிலை, 401-500 கடுமையான நிலை என வகைப்படுத்தப்படுகிறது.

தில்லியில் தற்போது காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதால், படிப்படியான எதிா்வினைச் செயல் திட்டத்தின் (ஜிஆா்ஏபி) இரண்டாம் கட்டக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இதன்படி, இயந்திரங்கள் மற்றும் வெற்றிடத் தொழில்நுட்பம் மூலம் சாலைகளைத் தீவிரமாகச் சுத்தம் செய்தல், தண்ணீா் தெளித்தல், கட்டுமானப் பகுதிகளில் தூசிக் கட்டுப்பாட்டை கடுமையாக்குதல், கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்த ஆய்வுகளை அதிகரித்தல் உள்ளிட்ட 12 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.