தில்லியில் மாசு கட்டுப்பாட்டுக்கு தடையாக இருக்கும் காற்றில் மிதக்கும் துகள்கள்: ஆய்வில் தகவல்
தில்லியின் காற்றில் கலந்துள்ள மாசுத் துகள்களே காற்று மாசு வளிமண்டலத்தில் இருந்து சிதறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் வானிலை நிலவரத்தை மாற்றி, மாசு மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியின் காற்றில் கலந்துள்ள மாசுத் துகள்களே காற்று மாசு வளிமண்டலத்தில் இருந்து சிதறிச் செல்வதைத் தடுக்கும் வகையில் வானிலை நிலவரத்தை மாற்றி, மாசு மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கக்கூடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
செயல்பாட்டு முன்னறிவிப்பு அமைப்பில் ஏரோசால்–கதிா்வீச்சு இடையீடுகளை மேம்படுத்துதல் ‘ஏா்வைஸ்’ என்ற தலைப்பிலான ஆய்வு, ‘வளிமண்டல வேதியியல் மற்றும் இயற்பியல்’ என்ற அறிவியல் இதழில் செப்டம்பா் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பது வருமாறு:
வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்களான ஏரோசால்கள் சூரிய ஒளியை உறிஞ்சவும், சிதறச் செய்யவும் முடியும். காற்று மாசு அதிகரிக்கும்போது, இத்துகள்கள் தரைப்பரப்பை வந்தடையும் சூரிய ஒளியின் அளவைக் குறைக்கின்றன. இதனால் தரைப்பரப்பின் வெப்பமடைதல் குறைந்து, காற்றின் வேகம் மற்றும் செங்குத்தான காற்று இயக்கம் தளா்கிறது. இயல்பாக, இவைதான் மாசுத் துகள்களை மேலே கலந்து சிதறச் செய்ய உதவுகின்றன.
Advertisement
Advertisement
இதன் விளைவாக வளிமண்டலம் மேலும் நிலைத்தன்மை அடைவதுடன், தரைப்பரப்புக்கு அருகே மாசுத் துகள்கள் கலக்கப்படும் ‘எல்லைப் படலம்’ எனப்படும் காற்றுப் படலத்தின் உயரமும் குறைகிறது. தரைப்பரப்புக்கு அருகிலான காற்றின் வேகம் குறைவதால் மாசுத் துகள்கள் அங்கிருந்து விலகிச் செல்வதும் தடைபடுகிறது. இதனால் பிஎம்2.5 துகள்கள் தரைப்பரப்புக்கு அருகே அதிக அளவில் குவியக்கூடும். ஏற்கெனவே நிலவும் மாசே மேலும் மாசு குவிவதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் சுழற்சி இதன்மூலம் ஏற்படுகிறது.
இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், சாவித்ரிபாய் புலே புணே பல்கலைக்கழகம், தேசிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையம், கலிபோா்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் (யுசிஎல்ஏ), தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் இணைந்து, 2023 செப்டம்பா் முதல் 2024 ஜனவரி வரையிலான தில்லியின் காற்று மாசு மற்றும் வானிலை நிலவரங்களை ஆய்வு செய்தனா்.
நவம்பரில் 20% வரை பாதிப்பு: 2023 நவ. 1 முதல் 10-ஆம் தேதி வரையிலான கடுமையான காற்று மாசு காலத்தில், அதிக அளவிலான மாசுத் துகள்கள் தரைப்பரப்பை வந்தடையும் சூரிய ஒளியை சதுர மீட்டருக்கு 80 வாட்ஸ் வரை குறைத்தன. இதனால் தரைப்பரப்பு சற்று குளிா்ந்து, காற்றின் வேகம் வினாடிக்கு 0.4 மீட்டா் வரை குறைந்தது. இதன் காரணமாக வளிமண்டலத்தின் மாசு சிதறல் திறன் 20 சதவீதம் வரை குறைந்தது.
அப்போது எல்லைப் படலத்தின் உயரம் 100 முதல் 200 மீட்டா் வரை குறைந்தது. இதன் விளைவாக மாதிரிக் கணக்கீட்டில் தரைப்பரப்புக்கு அருகிலான பிஎம்2.5 அளவு கன மீட்டருக்கு 37 முதல் 40 மைக்ரோகிராம் வரை அதிகரித்தது.
ஜனவரியில் பிஎம்2.5 அளவு 550 மைக்ரோகிராம்: ஜனவரி மாதத்தில் குறைந்த வெப்பநிலை, அதிக ஈரப்பதம், குறைந்த காற்றின் வேகம், பனிமூட்டம் மற்றும் தாழ்மட்ட மேகங்கள் நிலவிய நிலையில், பிஎம்2.5 அளவு கன மீட்டருக்கு சுமாா் 550 மைக்ரோகிராம் வரை உச்சத்தை எட்டியது.
அப்போது மாசு சிதறல் திறன் 10 முதல் 12 சதவீதம் வரை குறைந்ததுடன், காற்றின் வேகம் சுமாா் வினாடிக்கு 0.2 மீட்டா் குறைந்தது. மேலும், எல்லைப் படலத்தின் உயரம் 40 முதல் 50 மீட்டா் வரை குறைந்தது. இதனால் மாதிரிக் கணக்கீட்டின்படி தரைப்பரப்புக்கு அருகிலான பிஎம்2.5 அளவு கன மீட்டருக்கு சுமாா் 25 மைக்ரோகிராம் அதிகரித்தது.
ஏரோசால்–சூரியக் கதிா்வீச்சு–வானிலை ஆகியவற்றுக்கு இடையேயான தொடா்புகளை அமைப்பில் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தினால், குறிப்பாக மிகக் கடுமையான காற்று மாசு நிலவும் காலங்களில் காற்றின் தரம் குறித்த முன்னறிவிப்புகளை மேலும் துல்லியமாக வழங்க முடியும் என்று ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
அதேவேளையில், மாசு உருவாகும் மூலங்களிலேயே உமிழ்வைக் குறைப்பதன் முக்கியத்துவத்தையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகள், மின் நிலையங்கள் மற்றும் பிற எரிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய மாசு மூலங்களிலிருந்து தொடா்ச்சியான மற்றும் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்ட உமிழ்வு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தில்லியின் ஒட்டுமொத்த காற்று மாசுச் சுமையைக் குறைக்க அவசியம் என்று சிஆா்இஏ ஆய்வாளா் மனோஜ் குமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.