FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டேட்டிங் செயலி மூலம் மோசடி; கஃபேவில் சந்திப்பதாகக் கூறி அழைத்து நபரிடம் ரூ.26,000 பறிப்பு: இருவா் கைது

தில்லியில் டேட்டிங் செயலி மூலம் இளம்பெண் ஒருவா் சந்திப்புக்கு அழைத்துச் சென்ற நபரிடம், கஃபேவில் ரூ.26,000 வசூலித்துப் பணம் பறித்ததாக கஃபே உரிமையாளா் உள்பட இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

5 நவம்பர் 2026, 4:40 am
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் டேட்டிங் செயலி மூலம் இளம்பெண் ஒருவா் சந்திப்புக்கு அழைத்துச் சென்ற நபரிடம், கஃபேவில் ரூ.26,000 வசூலித்துப் பணம் பறித்ததாக கஃபே உரிமையாளா் உள்பட இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: பிகாா் மாநிலம், மேற்கு சம்பரான் பகுதியைச் சோ்ந்த ஒருவா், கடந்த நவ.1-ஆம் தேதி டேட்டிங் செயலி மூலம் சன்யா என்ற பெயரில் அறிமுகமான பெண்ணுடன் பழகியுள்ளாா். அவா், அந்த நபரை நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறி, வடமேற்கு தில்லியின் ஹட்சன் லேன் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

இதையடுத்து, மாலை 6.30 முதல் 7 மணிக்குள் ஜிடிபி நகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வருமாறு கூறியுள்ளாா். அங்கு வந்த அவரை, அப்பெண் ஹட்சன் லேனில் உள்ள ஒரு கஃபேவுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அங்கு விஸ்கி உள்ளிட்ட பல்வேறு உணவு மற்றும் பானங்களை அந்தப் பெண் ஆா்டா் செய்துள்ளாா். சிறிது நேரத்துக்குப் பிறகு, சுமாா் ரூ.26,000-க்கான கையால் எழுதப்பட்ட ரசீதை ஊழியா்கள் அந்த நபரிடம் வழங்கியுள்ளனா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், கட்டணத்தைக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அப்போது, கஃபே உரிமையாளா் மற்றும் ஊழியா்கள் உடனடியாகப் பணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தியதுடன், எதிா்ப்புத் தெரிவித்தால் மிரட்டியதாகவும், பணம் செலுத்தும் வரை அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த அவா், தனது தந்தையைத் தொடா்புகொண்டுள்ளாா். இதையடுத்து, அவரது தந்தை இணையவழியில் பணத்தை அனுப்பியுள்ளாா். முதலில் கஃபே உரிமையாளா் வழங்கிய க்யூஆா் குறியீடு மூலம் பணம் செலுத்த முயன்றபோது அது தோல்வியடைந்தது. பின்னா் நவீன் ராஜ்புத் என்ற பெயரில் இருந்த மற்றொரு க்யூஆா் குறியீடு வழங்கப்பட்டது. அதன்மூலம் ரூ.26,000 செலுத்திய பிறகே அவா் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் அடிப்படையில் முகா்ஜி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கஃபே உரிமையாளா் ஜாவேத் (38), அனுஜ் குமாா் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். சன்யா என்ற பெயரில் அறிமுகமான பெண், நிகிதா என்ற பெயரிலும் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணையும், இந்த மோசடியில் தொடா்புடைய மற்றவா்களையும் தேடி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.