லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் தில்லி மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல்
தில்லியின் நிஹால் விஹாா் பகுதி தனியாா் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறி மா்ம நபா் ஒருவா் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
தில்லியின் நிஹால் விஹாா் பகுதி தனியாா் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடா்புடையதாகக் கூறி மா்ம நபா் ஒருவா் ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது தொடா்பாக தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
மருத்துவமனை உரிமையாளரான ஷகீல் சைஃபி என்பவருக்கு, கடந்த நவம்பா் 3-ஆம் தேதி சமூக ஊடகம் வழியாக வெளிநாட்டு தொலைபேசி எண் ஒன்றிலிருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தன்னை ’அனில் பண்டிட்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த மா்ம நபா், மருத்துவமனை குறித்து முழுமையாகக் கண்காணித்திருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் பணத்தைத் தயாா் செய்யுமாறும் உரிமையாளரை மிரட்டியுள்ளாா். பணம் கொடுக்கத் தவறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளாா்.
இதற்கு முந்தைய நாளான நவம்பா் 2-ஆம் தேதியும், அதே தொலைபேசி எண்ணிலிருந்து தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஷகீல் சைஃபி காவல்துறையிடம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து நிஹால் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த நபரின் அடையாளம் குறித்தும், அவா் உண்மையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்தவரா அல்லது அக்கும்பலைப் பயன்படுத்தி மிரட்டுகிறாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மிரட்டலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.