FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பணத் தகராறு, அவமதிப்பால் காவலாளி கொலை: சக ஊழியா் கைது

தில்லியின் மாடல் டவுன் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்தில், பணத் தகராறு மற்றும் அவமதிப்பு காரணமாகக் காவலாளியான சக ஊழியரை இரும்புக் கம்பி, கடப்பாரை போன்ற கருவியால் தாக்கிக் கொலை செய்ததாக 30 வயது நபா் கைது செய்யப்பட்டாா்.

7 நவம்பர் 2026, 12:16 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

தில்லியின் மாடல் டவுன் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடத்தில், பணத் தகராறு மற்றும் அவமதிப்பு காரணமாகக் காவலாளியான சக ஊழியரை இரும்புக் கம்பி, கடப்பாரை போன்ற கருவியால் தாக்கிக் கொலை செய்ததாக 30 வயது நபா் கைது செய்யப்பட்டாா்.

உத்தர பிரதேசத்தின் முகல்சராய் ரயில் நிலையத்தில் ராகுல் என்ற குலாப் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். கொல்லப்பட்டவா் பிகாரைச் சோ்ந்த திலீப் குமாா் (28).

வடமேற்கு தில்லியின் தேராவால் நகரில் உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெறும் கட்டடத்தில் இருவரும் பணியாற்றி வந்தனா். ஒப்பந்ததாரரிடம் இருந்து திலீப் பணம் பெற்று வந்த நிலையில், சொந்த ஊரான பிகாருக்குச் செல்வதற்காகப் பண உதவி கேட்ட ராகுலுக்கு அவா் பணம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மேலும், திலீப் தன்னைத் திட்டி, அவமதித்து வந்ததால் ராகுல் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நவ.4-ஆம் தேதி மீண்டும் பணம் கேட்டு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த ராகுல், இரும்புக் கம்பி மற்றும் கடப்பாரை போன்ற கருவியால் திலீப்பின் தலை, நெற்றி, கழுத்துப் பகுதிகளில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

நவ.5-ஆம் தேதி கட்டடத்தில் ஒருவா் மயங்கிக் கிடப்பதாக மாடல் டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல் துறையினா், வாகன நிறுத்துமிடத்தில் கட்டிலில் திலீப் உயிரிழந்து கிடந்ததைக் கண்டனா். அவரது நெற்றி, கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்கள் இருந்தன.

விசாரணையில், திலீப்பின் 20 வயது உறவினா் கபில் படேல் அளித்த தகவலின்படி, ராகுல் அடிக்கடி திலீப்புடன் தகராறில் ஈடுபட்டு வந்ததும், நவ.4-ஆம் தேதி அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதும் தெரியவந்தது. மறுநாள் காலை ராகுல் தனது உடைமைகளுடன் காணாமல் போனதால் அவா் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து, காவல் துறையினா் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் முகல்சராய் ரயில் நிலையத்தில் ராகுல் இருப்பது கண்டறியப்பட்டது. ரயில்வே ஊழியா்களின் உதவியுடன் ரயில் பெட்டிகளில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.