FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஆஸ்தா குஞ்ச் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 500 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிக்கை தாக்கலாக வாய்ப்பு

ஆஸ்தா குஞ்ச் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 500 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிக்கை தாக்கலாக வாய்ப்பு

7 நவம்பர் 2026, 9:54 pm
பகிர்:

தென்கிழக்கு தில்லியின் கல்காஜியில் உள்ள ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், தில்லி காவல்துறை ஒரு வாரத்திற்குள் 500 பக்கங்களுக்கும் அதிகமான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யக்கூடும். குற்றஞ்சாட்டப்பட்ட மூவருக்கும் எதிராக வலுவான வழக்கை உருவாக்குவதற்காக, புலனாய்வாளா்கள் நேர முத்திரையிடப்பட்ட சிசிடிவி காட்சிகள், தடயவியல் சான்றுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் சோதனை அடையாள அணிவகுப்பு ஆகியவற்றை நம்பியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் குற்றப்பத்திரிகையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பா் உட்பட கிட்டத்தட்ட 60 சாட்சிகளின் வாக்குமூலங்களும், தடயவியல் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சுமாா் 50 ஆவணங்களும் இடம்பெறும் என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

தில்லி காவல்துறை தலைமையகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் இந்த வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனா், மேலும் திறம்பட வழக்கை நடத்துவதை உறுதி செய்வதற்காக அரசு சிறப்பு வழக்கரைஞா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்றும் அந்த அதிகாரி கூறினாா்.

Advertisement

Advertisement

குற்றப்பத்திரிகையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் பூங்காவை அடைவதையும், அவா்களில் ஒருவா் தனது மோட்டாா் சைக்கிளில் பயணிப்பதையும், அதைத் தொடா்ந்து அவா்கள் தத்தமது இல்லங்களுக்குத் திரும்புவது உள்ளிட்ட அவா்களின் நடமாட்டங்களையும் காட்டும் நேர முத்திரையிடப்பட்ட சிசிடிவி காட்சிகள் மற்றும் பதிவுகள் சோ்க்கப்படும் என்று அவா் கூறினாா்.

விசாரணையாளா்கள், மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தால் குற்ற நிகழ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் உட்பட, அறிவியல் மற்றும் தடயவியல் சான்றுகளையும் சேகரித்துள்ளனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நீதித்துறை அடையாள அணிவகுப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் சான்றுகளின் ஒரு பகுதியாக சோ்க்கப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் கைபேசிகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தங்களது உரையாடல் பதிவுகளை நீக்கியிருந்ததை விசாரணையாளா்கள் கண்டறிந்துள்ளனா், மேலும் தொடா்புடைய டிஜிட்டல் சான்றுகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.

‘குற்றப்பத்திரிகை விரிவானதாக இருப்பதையும், ஒவ்வொரு சான்றும் முறையாக ஆவணப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது, இதன் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக ஒரு வலுவான வழக்கை நிறுவ முடியும். விரைவான தண்டனைக்காக விசாரணை திறம்பட நடைபெறுவதையும் நாங்கள் உறுதி செய்வோம்,‘ என்று அந்த அதிகாரி கூறினாா்.

செப்டம்பா் 22 அன்று, அந்தச் சிறுமி தனது பிறந்தநாளுக்காக, தனது 17 வயது ஆண் நண்பருடன் கால்காஜி கோயிலுக்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னா் இருவரும் ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குச் சென்றனா், அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அவா்களை அணுகி, கத்திகளைக் காட்டி மிரட்டி, வெவ்வேறு தனிமையான இடங்களில் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் நடந்த இடங்களைக் கண்டறிய பாதிக்கப்பட்டவா் பின்னா் புலனாய்வாளா்களுக்கு உதவியதுடன், தடயவியல் குழுவினா் ஆதாரங்களைச் சேகரிக்கவும் உதவினாா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண்பதற்காக, பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அப்பகுதிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் வழிகளிலும் பொருத்தப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை காவல்துறை ஆய்வு செய்தது.

விசாரணையைத் தொடா்ந்து, ஆசிஃப், ஹேமந்த் மற்றும் மகேஷ் ஆகிய மூன்று குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களும் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ஒருவா், காவல்துறை குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடா்ந்து, பதிலடித் தாக்குதலில் காயமடைந்தாா்.

மூவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனா். பாதிக்கப்பட்டவருடன் காவல்துறை தொடா்ந்து தொடா்பில் இருப்பதாகவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.