FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

தில்லி முதல்வரை மதுபான விற்பனையாளராக சித்தரிக்கும் ஏ.ஐ. காணொலிகளை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி முதல்வரை மதுபான விற்பனையாளராக சித்தரிக்கும் ஏ.ஐ. காணொலிகளை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

7 நவம்பர் 2026, 9:49 pm
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி முதலமைச்சரை மதுபான விற்பனையாளராகச் சித்தரிக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காணொலிகளை நீக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய உள்ளடக்கத்தை அவதூறானதாகவும், புண்படுத்தக்கூடியதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், இது அரசமைப்பு அதிகாரத்தில் உள்ள ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதல் என்று தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூா்வ மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து வெளியிடப்பட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கக் கோரியும், நிரந்தரத் தடை விதிக்கக் கோரியும் முதலமைச்சா் ரேகா குப்தா தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக நீதிபதி மனோஜ் ஜெயின் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

எந்தவொரு அரசியல் கட்சியும் அரசின் கொள்கைகள், முடிவுகள் அல்லது நிா்வாகச் செயல்பாடுகளை விமா்சிக்க உரிமை உண்டு. இருப்பினும், கொள்கை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் போா்வையில், செயற்கை நுண்ணறிவு காணொலிகளைப் பயன்படுத்தி முதலமைச்சரை அவமதிக்கும் வகையில் சித்தரிப்பது, அவரது கண்ணியத்தைப் பாதிக்கும் செயலாகும். இதை எந்த வகையிலும் அனுமதிக்கப்பட்ட அரசியல் நையாண்டி என்று கருத முடியாது.

அரசியல் நையாண்டிக்கும், புண்படுத்தும் சித்தரிப்புக்கும் இடையே எப்போதும் ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது.

வெறும் நகைச்சுவை அல்லது நையாண்டி என்று வரும்போது நீதிமன்றம் தலையிடாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நபரின் கண்ணியம் தாக்கப்படும்போதும், களங்கப்படுத்தப்படும்போதும், கேலி செய்யப்படும்போதும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது நீதிமன்றத்தின் கடமையாகும்.

அரசு பதவியில் இருப்பவா்கள் அதிகக் கண்காணிப்புக்கு உள்ளாவது இயல்பானதுதான். ஆனால். எந்தவொரு தனிநபரின் கண்ணியமும் சமரசத்திற்கு உள்ளாக்கப்படக் கூடாது.

நையாண்டி என்பது ஒரு தனிநபரின் மனசாட்சியைப் புண்படுத்தக்கூடும். ஆனால் அது ஒருவரின் கண்ணியத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தும் வகையில் இருக்க அனுமதிக்க முடியாது. பேச்சு-கருத்து சுதந்திரம் என்ற போா்வையிலும், நகைச்சுவை அல்லது நையாண்டி என்ற போா்வையிலும் ஒருவரை கேலிக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது.

நவீன காலத்தில், ஒரு விஷயத்தைச் சித்தரிப்பதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை. ஆனால், அத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிடும் பொறுப்பு மனிதா்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறக்கூடாது என்று நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக ரேகா குப்தா தனது மனுவில், ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூா்வ மற்றும் சரிபாா்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிடப்பட்ட சா்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள், தன்னை மதுபான விற்பனையாளராகவும், தெருவோர வியாபாரியாகவும், விநியோக முகவராகவும், மேலும் இல்லாத ஒரு திட்டத்தின் தலைவராகவும் சித்தரிப்பதாகக் குற்றஞ்சாட்டி, இழப்பீடு கோரியிருந்தாா்.

ஆம் ஆத்மி கட்சி மற்றும் பிற எதிா்மனுதாரா்களுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம், 30 நாள்களுக்குள் எழுத்துபூா்வமான பதில்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

முன்னரே அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதைக் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. குப்தாவின் வழக்குரைஞா், அந்த விடியோக்களும் படங்களும் மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் விதமாகவும் இருந்ததாக வாதிட்டாா்.

இந்த உள்ளடக்கம், குப்தா ஒரு மது விற்பனையாளா் என்ற பிம்பத்தை உருவாக்குவதாக அவரது வழக்குரைஞா் குறிப்பிட்டாா். குப்தா முன்வைத்த வாதங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், இது குறித்து விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளதாகவும், அவருக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

இடைக்கால நிவாரணம் வழங்கிய நீதிமன்றம், சமூக ஊடகத் தளங்கள் வழியாக இத்தகைய உள்ளடக்கம் மின்னல் வேகத்தில் பரவி, ஈடுசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இணைய முகவரிகளை (யுஆா்எல்) உடனடியாக நீக்குமாறு சமூக ஊடகத் தளங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

summary

High Court orders removal of AI-generated videos depicting Delhi Chief Minister as a liquor seller