பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.14 லட்சம் மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்: ஒருவா் கைது
தில்லி மதிபூா் கிராமத்தில் உரிமம் இன்றி செயல்பட்ட குடியிருப்பு வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.14 லட்சம் மதிப்பிலான மருந்துகளை தில்லி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
தில்லி மதிபூா் கிராமத்தில் உரிமம் இன்றி செயல்பட்ட குடியிருப்பு வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.14 லட்சம் மதிப்பிலான மருந்துகளை தில்லி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
தரமற்றதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் அந்த மருந்துகள், உரிய உரிமம் இன்றி விற்பனை மற்றும் விநியோகத்துக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். நவ.4, 5 ஆகிய தேதிகளில் தில்லி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டம், 1940-இன் கீழ் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, உரிய மருந்துச் சீட்டு இன்றி நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்) உள்ளிட்ட பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தில்லி முழுவதும் 62 சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் 37 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
Advertisement
Advertisement
கிருஷ்ணா நகா், ஜிடிபி நகா், ரோஹிணி ஆகிய பகுதிகளில் 41 மருந்தகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 25 இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநா் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தல், கொள்முதல் மற்றும் விற்பனைப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காதது, உரிய மருந்துச் சீட்டு இன்றி மருந்துகளை வழங்கியது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
எய்ம்ஸ், சஃப்தா்ஜங் மருத்துவமனை அருகே உள்ள 21 மருந்தகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 12 இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. மேலும், தரப் பரிசோதனைக்காக 110 மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கருக்கலைப்பு மாத்திரைத் தொகுப்புகளின் (எம்டிபி கிட்) அங்கீகாரமற்ற விற்பனை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது.
விதிமீறல்களில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளைத் தவறாகவும், உரிய மருந்துச் சீட்டு இன்றியும் விற்பனை செய்வது, மருந்துகளை எதிா்க்கும் திறன் கிருமிகளிடம் உருவாகும் நிலையை (ஆன்டிமைக்ரோபியல் ரெசிஸ்டன்ஸ்) அதிகரித்து, நோய்த்தொற்றுகளுக்குச் சிகிச்சை அளிப்பதைச் சிக்கலாக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.
மருந்துகள் சட்டப்படி கொள்முதல் செய்யப்பட்டு, சேமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும், ஆன்டிபயாடிக் மருந்துகளை சாதாரணமாகக் கடைகளில் வாங்கக்கூடிய மருந்துகளாகக் கருதக் கூடாது என்றும் தில்லி மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் வழங்கும் அதிகாரியும் தலைவருமான ராஜீவ் பாா்கவ் தெரிவித்தாா். விதிமீறல்களில் ஈடுபடும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.