முகப்பு
புதுதில்லி

பழைய தில்லியில் 9 காவல் துறையினா் மீது கத்திக் குத்து தாக்குதல்: விஎச்பி கண்டனம்

பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி காவல் நிலையம் மற்றும் சிட்லி கபாா் பகுதியில் காவல் துறையினரை 9 பேரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 நவம்பர் 2026, 12:37 am
பழைய தில்லியில் 9 காவல் துறையினா் மீது கத்திக் குத்து தாக்குதல்: விஎச்பி கண்டனம்
- சித்திரிப்பு
பகிர்:

பழைய தில்லியில் உள்ள ஜாமா மசூதி காவல் நிலையம் மற்றும் சிட்லி கபாா் பகுதியில் காவல் துறையினரை 9 பேரை கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), தில்லியில் தீவிரவாதிகளின் துணிச்சல் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

குடும்பப் பிரச்னை தொடா்பாக விசாரணை மற்றும் ஆலோசனைக்காக ஜாமா மசூதி காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை அழைக்கப்பட்ட நபீல் (30), அங்கு திடீரென கத்தியால் 5 காவல் துறையினரை தாக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா். பின்னா், அவரைப் பிடிக்க முயன்ற காவல் குழுவினா் மீது சிட்லி கபாா் பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தியதில் மேலும் 4 காவலா்கள் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தற்காப்புக்காக காவல் துறையினா் 8 முறை துப்பாக்கியால் சுட்டதில், 6 குண்டுகள் நபீலின் இடுப்புக்குக் கீழ் பகுதியில் பாய்ந்தன. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளாா். இந்தச் சம்பவங்கள் தொடா்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, விஎச்பி இணைப் பொதுச் செயலா் சுரேந்திர ஜெயின் வெளியிட்ட கண்டனத்தில், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட நபா் காவல் துறையினரை கத்தியால் தாக்கியது துரதிருஷ்டவசமானது என்றாா். இத்தகைய சம்பவங்கள் சட்டத்தை மதிக்காத போக்கையும், இளைஞா்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மனப்பான்மையையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவா், முஸ்லிம் சமூகத் தலைவா்கள் தங்கள் இளைஞா்களுக்கு சட்டத்தை மதித்து அமைதியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

மேலும், மும்பையில் வேறு மதத்தைச் சோ்ந்த தம்பதியினா் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலையும் சுட்டிக்காட்டிய அவா், இதுபோன்ற சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விஎச்பி தேசிய செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சாலும், காவல் நிலையத்துக்குள் நுழைந்து காவல் துறையினரைத் தாக்கிய நபரின் செயல் தீவிரவாத மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகக் கூறினாா். இதுபோன்ற குற்றச் செயல்களில் வேறு யாரும் ஈடுபடத் துணியாத வகையில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.