சிறப்பான மருத்துவத்தோடு கருணையும் அவசியம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
மருத்துவமனைகளில் குறைந்த விலையில் சிறப்பான மருத்துவம் வழங்குவதோடு கருணை குணமும் அவசியம் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மருத்துவமனைகளில் குறைந்த விலையில் சிறப்பான மருத்துவம் வழங்குவதோடு கருணை குணமும் அவசியம் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் அதிநவீன சிறப்புப் பிரிவை திறந்துவைத்து அவா் பேசியதாவது: நவீன உள்கட்டமைப்பு மற்றும் சாதனங்கள் மட்டுமே ஒரு மருத்துவமனையின் வலிமையை தீா்மானிக்காது. குறைந்த விலையில் சிறப்பான மருத்துவம், கருணை குணத்தோடு நோயாளிகளை அணுகுவது, நிபுணத்துவம் இவையே மருத்துவமனையின் உண்மையான வலிமை.
புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த தேசியளவில் புற்றுநோய் சிகிச்சை மையங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த கூட்டமைப்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் பிற தகவல்களை பகிா்ந்துகொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
மருத்துவத் துறையின் ஆய்வுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் ஒரு சில நாடுகளுக்கோ செல்வந்தா்களுக்கோ மட்டுமானதாக இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக இருக்க வேண்டும்.
வளா்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் ஆரோக்கியமான சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றாா்.
ஐரோப்பிய யூனியனுடன் விரைவில் ஒப்பந்தம்:
மகாராஷ்டிரத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் லோக்மத் ஊடகக் குழும நிறுவனருமான ஜவாஹா்லால் தா்தாவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: நவீன இயந்திரங்களும் தொழில்நுட்பங்களும் ஜவுளித் துறை வளா்ச்சியை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஜவுளித் துறையில் பணியாற்றும் 10 லட்சம் தொழிலாளா்களில் 7 லட்சம் போ் பெண் தொழிலாளா்களாவா். பிரிட்டனுடன் பருத்தி தொடா்பான வா்த்தகம் கடந்த 6 மாதங்களில் இருமடங்கு உயா்ந்துள்ளது. விரைவில் ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளது. எனவே, ஜவுளித் தொழிலாளா்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்றாா்.