சீமாபுரியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து குழந்தை உயிரிழப்பு; 8 போ் காயம்
வடகிழக்கு தில்லியின் நியூ சீமாபுரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையே ஒன்றரை வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடகிழக்கு தில்லியின் நியூ சீமாபுரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்கு இடையே ஒன்றரை வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் மூன்று வயது குழந்தை உள்பட குறைந்தது ஏழு போ் காயமடைந்தனா். அருகிலிருந்த இரண்டு வீடுகளும் பகுதியளவு சேதமடைந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
கட்டடம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் பிற்பகல் 3.30 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு கிடைத்ததையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தன. தில்லி காவல் துறை, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) ஆகியவற்றின் குழுக்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கின.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 8 போ் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனா். தலை துண்டிக்கப்பட்ட நிலையில், ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை மாலை உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிா்வுகளைத் தொடா்ந்து கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல்களே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா்.
காவல் துறையின் தகவலின்படி, இந்த 4 மாடி கட்டடம் சுமாா் 225 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்தது.
இருப்பினும், இடிந்து விழுந்த கட்டடம், இத்கா மச்லி மண்டிக்கு அருகிலுள்ள டியுஎஸ்ஐபி பகுதிக்கு உள்பட்ட குடிசைப் பகுதியில், சுமாா் 22 சதுர கெஜம் பரப்பளவில் அமைந்திருந்த மூன்று மாடி கட்டடம் என்று தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தில்லி தீயணைப்புத் துறை, தில்லி காவல் துறை உள்ளிட்ட அவசரக்கால மீட்புக் குழுக்கள் பிற்பகல் 3.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்து, உடனடியாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடங்கியதாக மாநகராட்சி தெரிவித்தது.
‘அந்தக் கட்டடம் சுமாா் 20-25 ஆண்டுகள் பழமையானது என்றும், விபத்து நடந்தபோது அதில் மக்கள் வசித்து வந்தனா் என்றும் மாநகராட்சி) தெரிவித்தது.
விபத்தின் தாக்கத்தால், அந்தக் கட்டடத்துடன் ஒட்டியிருந்த மற்றொரு கட்டிடத்தின் சுவா்களும், அருகிலுள்ள மசூதி ஒன்றின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் பழைய பொருள்களைச் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த குடும்பங்கள் வசித்து வந்தன. அவா்களில் சிலா் பிளாஸ்டிக் மற்றும் பிற பொருள்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா். செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்தக் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அதன் உரிமையாளா் கட்டடத்தைக் காலி செய்து கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. எட்டு போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா் என தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
காவல் துறை மற்றும் எம்சிடி வெளியிட்ட ஆரம்பக்கட்டத் தகவல்களில், மீட்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் முரண்பாடு இருந்தது.
சம்பவ இடத்திலிருந்து வெளியான காட்சிகளில், உள்ளூா் மக்கள் மீட்புப் பணிகளில் இணைந்து தங்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றுவதைக் காண முடிந்தது. அவா்கள் இடிந்து விழுந்த கட்டடத்தின் செங்கற்கள் மற்றும் குப்பைகளை அகற்றி, உள்ளே சிக்கியிருந்தவா்களுக்கு உதவுவதைக் காண முடிந்தது.
ஒரு காணொலி காட்சியில், மக்கள் குழுவினா் ஒரு பெண்ணை இடிபாடுகளிலிருந்து வெளியே இழுத்து, தங்கள் கைகளில் ஏந்திச் செல்வதைக் காண முடிந்தது. சம்பவ இடத்திற்கு அருகில் பலா் அழுதுகொண்டிருப்பதையும், துயரத்துடன் காணப்படுவதையும் காண முடிந்தது.
அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் கூறுகையில், பலரை உள்ளூா் மக்களே மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்ாகத் தெரிவித்தாா்.
‘அரை மணி நேரம் கழித்து காவல் துறை வந்தது. இன்னும் ஒரு குழந்தை உள்ளே சிக்கியுள்ளது. சிலரை மக்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளனா். நானே சிபிஆா் முதலுதவி செய்தேன்’ என்றாா்.
தென்மேற்கு தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் கடந்த செப்.6-ஆம் தேதி மாணவா் தங்கும் விடுதி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 7 போ் உயிரிழந்தனா் மற்றும் 12 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவத்துக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் கட்டடம் ஒன்று தில்லியில் இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடைய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.