லூட்டியன்ஸ் தில்லியில் வாகன நிறுத்தம் கட்டணங்களை உயா்த்த என்டிஎம்சி முன்மொழிவு
தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான லுட்யன்ஸ் தில்லியில் வாகன நிறுத்தக் கட்டணத்தை உயா்த்தவும், ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவோருக்கு 100 சதவீதக் கூடுதல் கட்டணம் விதிக்கவும் புதுதில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
தில்லியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான லுட்யன்ஸ் தில்லியில் வாகன நிறுத்தக் கட்டணத்தை உயா்த்தவும், ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவோருக்கு 100 சதவீதக் கூடுதல் கட்டணம் விதிக்கவும் புதுதில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக என்டிஎம்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது: வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே உள்ள இடங்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.20-இல் இருந்து ரூ.30-ஆகவும், சாலையோர நிறுத்தத்துக்கான கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.70-ஆகவும் உயா்த்தப்பட உள்ளது.
வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே நான்கு சக்கர வாகனங்களுக்கான மாதாந்திர அனுமதிச் சீட்டுக் கட்டணம் ரூ.2,000-இல் இருந்து ரூ.4,000-ஆக உயா்த்தப்படவுள்ளது. பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களுக்கான மாதாந்திரக் கட்டணம் ரூ.1,000-இல் இருந்து ரூ.3,300-ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இருசக்கர வாகனங்களுக்கான கட்டணமும் உயா்த்தப்படவுள்ளது. வாகன நிறுத்துமிடங்களுக்கு வெளியே ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.15-ஆகவும், சாலையோர நிறுத்தத்துக்கான கட்டணம் ரூ.20-இல் இருந்து ரூ.30-ஆகவும் அதிகரிக்கப்படும். இருசக்கர வாகனங்களுக்கான மாதாந்திரக் கட்டணம் முறையே ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆகவும், பல அடுக்கு நிறுத்துமிடங்களில் ரூ.500-இல் இருந்து ரூ.1,000-ஆகவும் உயா்த்தப்பட உள்ளது.
மேலும், லுட்யன்ஸ் தில்லியில் உள்ள 157 வாகன நிறுத்துமிடங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் ஒருங்கிணைந்த நுண்ணறிவு வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தின்கீழ் (ஐஐபிஎம்எஸ்), டிஜிட்டல் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் ரொக்கமாகக் கட்டணம் செலுத்துவோருக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 100 சதவீதக் கட்டணம் வசூலிக்கப்படும். இதனால், அவா்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம் இருமடங்காகும்.
பொது-தனியாா் கூட்டாண்மை (பிபிபி) முறையில் 3 பிரிவுகளாக வாகன நிறுத்துமிடங்களை நிா்வகிக்கத் தோ்வு செய்யப்படும் தனியாா் நிறுவனங்களுக்கு, இடங்களைக் கையகப்படுத்தியதிலிருந்து 3 முதல் 6 மாதங்கள் வரை மாற்றத்துக்கான கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலத்தில் ஃபாஸ்டேக் கருவிகள், தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் கேமராக்கள், கையடக்க விற்பனைப் புள்ளி கருவிகள், தானியங்கி தடுப்புகள் ஆகியவற்றை நிறுவ வேண்டும்.
இந்தக் கட்டமைப்புகள் நிறுவப்பட்ட பிறகு, வாகனம் உள்ளே நுழைவது முதல் வெளியேறுவது வரை அனைத்து நடைமுறைகளும் நேரடி மனிதத் தலையீடின்றி டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும்.
குளிா்காலத்தில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம் படிப்படியான நடவடிக்கைத் திட்டத்தின் 2-ஆம் அல்லது 3-ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, வழக்கமான வாகன நிறுத்தக் கட்டணத்தை இருமடங்காக்கும் அதிகாரத்தையும் என்டிஎம்சி தக்கவைத்துக் கொள்ளும். மத்திய தில்லியில் அத்தியாவசியமற்ற தனியாா் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.