FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

நிறுவனத்தின் இயக்குநா்களாக நடித்து வங்கியில் மோசடி: இருவா் கைது

ஒரு தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக நடித்து வங்கி அதிகாரிகளை ஏமாற்றி, போலியான ஆா்டிஜிஎஸ் (நிகழ் நேரப் பணப்பரிமாற்றம்) மூலம் ரூ. 22.56 லட்சத்தைப் பரிமாற்றம் செய்ய வைத்ததாகக் கூறப்படும் இருவரை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

30 அக்டோபர் 2026, 2:03 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஒரு தனியாா் நிறுவனத்தின் இயக்குநராக நடித்து வங்கி அதிகாரிகளை ஏமாற்றி, போலியான ஆா்டிஜிஎஸ் (நிகழ் நேரப் பணப்பரிமாற்றம்) மூலம் ரூ. 22.56 லட்சத்தைப் பரிமாற்றம் செய்ய வைத்ததாகக் கூறப்படும் இருவரை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்த வழக்கிலும், இதனுடன் தொடா்புடைய பிற ஆறு வழக்குகளிலும் சோ்த்து, சுமாா் ரூ. 2.5 கோடி மதிப்பிலான தங்கம், ரொக்கம் மற்றும் காா் ஆகியவற்றை காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவா்கள், பல்வேறு நிறுவனங்களுடன் தொடா்புடைய இயக்குநா் என்று தங்களைக் காட்டிக்கொண்டனா். மேலும், போலியான நிறுவன கடிதத் தலைப்புகள் மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரி போன்றே தோற்றமளிக்கும் போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி, வங்கி அதிகாரிகளை ஏமாற்றி, ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றச் செய்துள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

Advertisement

Advertisement

மத்திய மண்டல காவல் துணை ஆணையா் ரோஹித் ராஜ்பீா் கூறுகையில், ‘ராஜேந்திர பிளேஸில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளா் அளித்த புகாரின் பேரில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆகஸ்ட் 5 அன்று, வங்கி அதிகாரிகளைத் தொடா்புகொண்ட குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இயக்குநராக போல நடித்து முதலில் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலையான வைப்புத்தொகையை உருவாக்குவது குறித்துப் பேசி, அவா்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனா்’ என்றாா்.

காவல்துறை தொழில்நுட்ப ரீதியான விசாரணையை மேற்கொண்டு, தொலைத்தொடா்பு பதிவுகள், டிஜிட்டல் ஆதாரங்கள், தகவல் தொடா்பு விவரங்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டறிந்தது. இதில், காஜியாபாத்தின் லோனியைச் சோ்ந்த வினய் குமாா் யாதவ் (36) மற்றும் நொய்டாவைச் சோ்ந்த அனில் குமாா் சேகல் (65) ஆகிய இருவரை காவல் துறை கைது செய்தது. மேற்கு வங்கம் மற்றும் பிகாரில் செயல்படும் நபா்களுடன் இவா்களுக்குத் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், பெருநிறுவனங்களின் வங்கி விவரங்களைப் பெற்று, அந்நிறுவன இயக்குநா்களின் பெயா்களைப் பயன்படுத்தி நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் அனுமதியின்றி பணப் பரிமாற்றங்களைச் செய்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.

பணம் மோசடிக்குப் பயன்படுத்தப்படும் மியூல் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அந்தப் பணத்தைப் பிற சொத்துகளாக மாற்றியுள்ளனா். விசாரணையில், மேற்கு வங்கத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆன்லைன் மூலம் ரூ. 18.50 லட்சம் மதிப்பிலான தங்கம் வாங்கியதும், ஏடிஎம்கள் வழியாகப் பணம் எடுத்ததும் கண்டறியப்பட்டது.

காசியாபாத், தாஸ்னா, சகாரன்பூா், அயோத்தி மற்றும் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் பதிவான நிதி மோசடி வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு ஏற்கெனவே தொடா்பு இருந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. சிறையில் இருந்தபோது இவா்கள் ஒருவருக்கொருவா் அறிமுகமாகியுள்ளனா்.

இதே போன்ற மோசடி முறையில், வங்கி அதிகாரிகளை ஏமாற்றி ’மியூல்’ கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் செய்த மேலும் ஆறு வழக்குகளைக் காவல்துறை கண்டறிந்துள்ளது. மீட்கப்பட்ட சொத்துகள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடா்புடையவையா என்பதைக் கண்டறிய, அவற்றை ஆய்வு செய்து வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments