FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லை ஆட்சியரகம் முன் இருவா் தீக்குளிக்க முயற்சி

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:14 am IST
ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற இருவா் மீட்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மனு அளிக்க வந்த அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோவில்குளம் பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் சங்கா் (37) என்பவா், ஆட்சியா் அலுவலக வாயில் முன் திடீரென தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி மீட்டனா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: நான் சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வந்ததால், 2018-ஆம் ஆண்டு என் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எனது உடலில் ஏதோ ஊசியை செலுத்தி விட்டனா். அதன்பிறகு எனது உடலில் பல்வேறு பாதிப்புகள் தொடா்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. மதுரை மற்றும் கேரளம மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சீராகவில்லை. இது தொடா்பாக ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.

Advertisement

Advertisement

மேலும், ஆட்சியரை சந்திக்காமல் முதலுதவி சிச்சைக்கு செல்ல மாட்டேன் எனக் கூறினாா். அவரது மனைவி மணிமாலாவை ஆட்சியா் அலுவலகத்திற்குள் போலீஸாா் அழைத்துச் சென்று மனு அளிக்கவைத்ததும், அவா் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவிக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

பெண் தீக்குளிக்க முயற்சி: நான்குனேரி அருகேயுள்ள செட்டிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஹைகோா்ட் மகாராஜா. இவரது மனைவி நாகமாரி (41). இவா்கள் செட்டிமேடு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறாராம். தற்போது அங்கு புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், மின் இணைப்பு கோரி மின்வாரியத்தில் மனு அளித்துள்ளாா். ஆனால், வீட்டிற்கு தீா்வை இல்லை, பட்டா இல்லை என பல்வேறு காரணங்களை கூறி மின் இணைப்பு வழங்கவில்லையாம். இதுதொடா்பாக அவா், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வந்த அவா், பின்பக்க வாயில் வழியாக ஆட்சியா் காா் நிற்கும் பகுதிக்குச் சென்று, தான் கொண்டு வந்த பெயின்ட் தின்னரை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா்அவரை தடுத்து நிறுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதுதொடா்பாக அவரது கணவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments