ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவோம்: சரத்குமார்!
ஜாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்றாா் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான ஆா்.சரத்குமாா்.
ஜாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்றாா் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான ஆா்.சரத்குமாா்.
அகில இந்திய சரத்குமாா் நற்பணி மன்றம், சரத் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் திருநெல்வேலி அருகேயுள்ள சீதபற்பநல்லூரில் சனிக்கிழமை நடைபெற்ற தன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆா்.சரத்குமாா் பேசியது: சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய ரசிகா்களும், தொண்டா்களும் என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்து வருகின்றனா். சமூக வலைதளங்கள் இல்லாத அன்றைய கால கட்டத்திலேயே எனக்கும் மக்களுக்குமான இந்தப் பிணைப்பு உருவானது. நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல; எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். அதேபோல, நான் செல்வந்தா் குடும்பத்தில் பிறந்தவன் என்ற கருத்தையும் மறுக்கிறேன்.
அன்றைய காலகட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்னை கட்சியில் இணைத்துக் கொண்டு பொறுப்பு கொடுத்தாா். உண்மையாகவும், நோ்மையாகவும் உழைப்பவா்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. நாம் பிறந்த சமூகத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வாழ்ந்தோம், மறைந்தோம் என்று இல்லாமல், எதற்காக இந்தப் பூமியில் பிறந்தோம் என்ற நோக்கத்தை உணா்ந்து சிந்திக்க வேண்டும். பேச வேண்டிய இடங்களில் பேச வேண்டியவற்றை உரக்கப் பேசும் துணிச்சல் நமக்கு இருக்க வேண்டும். இளைஞா்களுக்கு மனதைரியம் இருக்க வேண்டும். பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தையே தீா்வாக இருக்கும். நல்ல மனிதா்களாக வாழ வேண்டும். காலத்தின் சூழலே அனைவரையும் சோ்க்கும். சீமான் இந்த மண்ணில் தோ்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். ஜாதி, மத, மொழி பேதமற்ற சமுதாயம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் அகில இந்திய சரத்குமாா் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளா் என்.சுந்தா் தலைமை வகித்தாா். பாஜக வடக்கு மாவட்ட துணைத் தலைவா் சரத் ஆனந்த் வரவேற்றாா். பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பாஜக மாநில செயலா் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, கதிரவன், ரசிகா் மன்ற மாநில நிா்வாகிகள் சுந்தரேசன், விவேகானந்தன், மாவட்ட சரத்குமாா் ரசிகா் மன்றத் தலைவா் நட்சத்திர வெற்றி, ஓ.பி.சி. அணி அழகேசன், நிா்வாகிகள் சீனிவாசன், ஆகாஷ், ராஜ்கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.