FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தனியாா் நிதி நிறுவன மேலாளருக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது

16 நவம்பர் 2026, 4:20 am
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலியில் தனியாா் நிதிநிறுவன மேலாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தச்சநல்லூா், கோகுல் நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (45). இவா் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக உள்ளாா்.

அந்நிறுவனத்தில் பாளையங்கோட்டை, கிருபா நகரைச் சோ்ந்த இசக்கி என்பவா் சுமை வாகனம் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தாராம். அதனை காலதாமதமின்றி திருப்பிச் செலுத்தக் கோரி நிதிநிறுவனம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அவரது மகன் கமலேஷ், அவரது நண்பா் திருமலைகொழுந்துபுரம் மகாராஜன் மகன் அடைக்கலம்(19) ஆகியோா் சோ்ந்து கடந்த 13 ஆம் தேதி அலுவலகம் முடிந்து வெளியே வந்த ஆனந்தகுமாரை அரிவாளால் வெட்டினராம். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

மற்றொரு சம்பவம்: மானூா் அருகே உள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பா. இவரது அண்ணன் அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ்(58). இவா்கள் இருவருக்குமிடைய நீண்ட நாள்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஊருக்கு வடக்குப்புறம் உள்ள செல்லப்பாவின் வயல் வரப்பை முத்துராஜ் சேதப்படுத்தினாராம். இதை தட்டிக்கேட்ட அவரது மகன் ஆனந்த் (23) என்பவரை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயம் அடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து முத்துராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.