சம்பன்குளம் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் எச்சரிக்கை!
குடியிருப்புகளுக்கு அருகில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதையடுத்து, பொதுமக்களுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

சம்பன்குளம் அருகே குடியிருப்புகளுக்கு அருகில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதையடுத்து, பொதுமக்களுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், கடையம் வனச் சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான சம்பன்குளம் - கோவிந்தப்பேரி சாலையில் நீலமேகபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை சிறுத்தை நடமாட்டம் இருந்ததை அப் பகுதியினா் பாா்த்துள்ளனா். இதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வனத் துறையினா் அப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, அந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். மேலும் அந்தப் பகுதி வழியாக மோட்டாா் பைக், சைக்கிள்களில் செல்வோா் கவனமாக கடந்து செல்ல வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement