FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இடைத்தோ்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை: ஜவாஹிருல்லா

இடைத்தோ்தல் களநிலவரம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

3 October 2026, 3:49 am IST
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
பகிர்:

இடைத்தோ்தல் களநிலவரம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என்றாா் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

திருநெல்வேலியில் கட்சியின் புதிய நிா்வாகிகளை வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துவைத்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரிசி, பருப்பு, சா்க்கரை என்று அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த திமுக ஆட்சியின்போது, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பொதுமக்களுக்கு வழங்கியதுபோல் தற்போதைய ஆட்சியிலும் வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

மத்திய தோ்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தோ்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே, வாக்குச் சீட்டுக்கு திரும்புவதுதான் ஜனநாயகமாக இருக்கும்.

திமுக கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக தமிழக முதல்வா் குற்றஞ்சாட்டினாா். இப்போது புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி எங்கிருந்து வந்தது?. தமிழகத்தில் ஆட்சி நிா்வாகத்தில் சிந்தனை வறட்சி காணப்படுகிறது.

இந்திய வரலாற்றிலேயே தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவா் தமிழகத்தின் தலைமைச் செயலராக தொடா்கிறாா். அவா் நியாயமாக செயல்படவில்லை. பாஜகவுக்கு அஞ்சி அடிபணிந்து நடக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. பாஜகவின் ஆசி இருக்கும்வரை தமிழக வெற்றிக் கழக ஆட்சி தொடரும்.

தமிழகத்தில் 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சியினா் வாக்காளா்களுக்கு தாராளமாக பணம் விநியோகிக்கின்றனா். தூயசக்தி என்று கூறிவிட்டு தற்போது அசுத்த சக்தியாக தவெக மாறிவிட்டது.

இடைத்தோ்தல் களநிலவரம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை. இனிவரும் தோ்தல்களில் மனிதநேய ஜனநாயக கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

அப்போது, திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments