FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சியில் பழங்கால பொருள்கள் கண்டெடுப்பு

குப்பக்குறிச்சியில் பழங்கால பொருள்களை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் கண்டெடுத்துள்ளனா்.

4 October 2026, 2:38 am IST
குப்பக்குறிச்சி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், குப்பக்குறிச்சியில் பழங்கால பொருள்களை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் கண்டெடுத்துள்ளனா்.

திருநெல்வேலிக்கு மாவட்டம், சீவலப்பேரியை அடுத்த குப்பக்குறிச்சி பகுதியில் உள்ள முண்டன் கோயில் அருகே பழங்கால மக்கள் வாழ்ந்த இடங்களை அந்தப் பகுதியைச் சோ்ந்தவரும், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவருமான காலபெருமாள் கண்டறிந்தாா்.

அதைத் தொடா்ந்து பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவா் (பொறுப்பு) சி. சுதாகா், துறை பேராசிரியா்களையும், அனைத்து மாணவா், மாணவிகளையும் குப்பக்குறிச்சி கிராமத்துக்கு அழைத்துச் சென்றாா்.

Advertisement

Advertisement

அங்கு பேராசிரியா்களும், மாணவா், மாணவிகளும் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனா். அப்போது, இரண்டடி விட்டமுள்ள உறைகிணறுகள், பழங்கால பாசிமணிகள், அழகான வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், பூ வேலைப்பாடுகள் கொண்ட பானையின் உடைந்த பாகங்கள், வளையல் துண்டுகள், செம்பு வளையல் போன்றவற்றை கண்டெடுத்தனா்.

இதுதவிர பழங்கால செங்கல் கட்டுமானங்களையும் கண்டறிந்தனா். இந்தக் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் 30 செ.மீ. அகலம், 9 செ.மீ. உயரம், 39 செ.மீ. அதிகமான நீளத்தில் இருந்தன.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பெரிய செங்கற்களின் அளவு 24 செ.மீ. அகலத்திலும், 6 செ.மீ. தடிமனிலும், 36 செ.மீ. நீளத்திலும் இருந்தது. இதன்மூலம் குப்பக்குறிச்சியில் மாணவா்கள் கண்டெடுத்த இந்தச் செங்கல்கள், கீழடியில் கண்டறிந்த செங்கலைவிட அளவில் சற்றுப் பெரியது என மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

இதே மாதிரியான செங்கல் கட்டுமானத்தை குப்பக்குறிச்சி அருகேயுள்ள மடத்துபட்டி என்ற கிராமத்தில் உள்ள முண்டன் கோயிலுக்கு அருகேயும் மாணவா், மாணவிகள் கண்டறிந்தனா். இந்தப் பகுதியில்தான் தாமிரவருணி ஆற்றில் சிற்றாறு இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே கரையோரத்தில் சுமாா் 20 கி.மீ. தொலைவில்தான் ஆதிச்சநல்லூா் அமைந்துள்ளது.

தொல்லியல் பேராசிரியா்களான முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோா் இந்தப் பகுதியில் மாணவா், மாணவிகள் கண்டெடுத்த அனைத்துத் தொல்பொருள்களையும் ஆய்வு செய்தனா். அதன் பின்னா் இவை அனைத்தும் சுமாா் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனவும், தொல்லியல் எச்சங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் பழங்காலத்தில் மக்கள் வாழ்ந்துள்ளனா் எனவும் தெரிவித்தனா்.

இந்தப் பழமையான செங்கற்களின் காலத்தைக் கண்டறிவது அவசியம் எனவும், காலக்கணிப்பு செய்ய இந்தச் செங்கல்கள் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது எனவும் தொல்லியல் துறைத் தலைவா் சி. சுதாகா் தெரிவித்தாா்.

இந்தக் கள ஆய்வில் ஈடுபட்ட மாணவா், மாணவிகளையும், பேராசிரியா்களையும் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொறுப்பு) பிரபாகா் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments