FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விளவங்கோடு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை: பெற்றோர் புகார்

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல், மலையாளம் பாட ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல், மலையாளம் பாட ஆசிரியர்கள் இல்லாததால் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் வழிக் கல்வியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு தமிழ் வழி வேதியியல் பாடப்பிரிவு ஆசிரியை 2 மாதங்களுக்கு முன் பணியிட மாறுதலாகி சென்றதையடுத்து அப்பணியிடம் காலியாகவே உள்ளது. இதனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடங்கள் பயிற்றுவிக்கப்படாத நிலையில், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதே போன்று 11, 12 ஆம் வகுப்புகளில் மலையாள மொழி பிரிவில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மலையாள பாடப்பிரிவு ஆசிரியை ஒருமாதத்துக்கு முன் மாறுதலாகி சென்றதையடுத்து, இப் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. இதனால் மலையாள மொழி பயிலும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேதியியல், மலையாளம் பாடப் பிரிவில் கல்வி பயின்று வரும் மாணவர்களால் பொதுத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்பள்ளியில் வேதியியல் தமிழ்வழி பாடப் பிரிவில் பயிலும் மாணவியின் பெற்றோர் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளியாக விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 12 ஆம் வகுப்பில் 2 ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கு 2 மாதமாக வேதியியல் உள்ளிட்ட பாடம் பயிற்றுவிக்கப்படவில்லை.

பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சியை எதிர்நோக்கும் கல்வித்துறை அதிகாரிகளால், ஆசிரியர்கள் இல்லாமலும் பாடம் பயிற்றுவிக்காமலும் நூறு சதவீத தேர்ச்சியை எப்படி சாத்தியமாக்க முடியும்? இதனால் எங்கள் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது என்றார் அவர்.

ஆகவே இப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments