FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம்: தமிழக அரசுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை

ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

11 நவம்பர் 2026, 12:37 am
தாரகை கத்பா்ட்
பகிர்:

ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா், கூட்டுறவுத் துறை அமைச்சா் ஆகியோருக்கு அவா் அனுப்பிய மனு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமாா் 1.5 லட்சம் போ் எவ்வித ஓய்வூதிய பலன்களுமில்லாததால் மருத்துவ செலவினங்கள், குடும்ப சுமைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

இச்சங்கங்களில் 2022ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்றோா் மாதம் ரூ. ஆயிரம் மட்டுமே கருணை ஓய்வூதியமாக பெறுகின்றனா். தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கும் மாதம் ரூ. ஆயிரம் மட்டுமே கருணை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இத்திட்டங்கள் அவா்களது மனைவியருக்கு எவ்வித பலனையும் தருவதில்லை. மேலும், கூட்டுறவு சங்கப் பதிவாளா்கள், செயற்பதிவாளா்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு எவ்வித பணப் பயன்களும் இல்லை.

கூட்டுறவு சங்கங்களின் ஆண்டு லாபத் தொகை, மூலதன நிதி இருப்பு நிலுவை, செயலிழந்த சங்கங்களின் சொத்துகளைக் கொண்டு மூலதன நிதியம் உருவாக்கி, அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுத்தாதவாறு ஓய்வூதியத்துக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்.

அதன்மூலம், ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 10 ஆயிரமும், அவா்களுக்குப் பிறகு மனைவியருக்கு ரூ. 5 ஆயிரமும் கருணை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.