சுற்றுலாப் பேருந்து மோதியதில் அரசு மருத்துவமனை செவிலியா் உயிரிழப்பு
தக்கலை அருகே இரவு பணி முடிந்து திங்கள்கிழமை காலை வீடு திரும்பியபோது, தனியாா் சுற்றுலாப் பேருந்து மோதி அரசு மருத்துவமனை பெண் செவிலியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே இலவுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டாலின் பினு ஜோனி. இவா், அந்தப் பகுதி தேவாலயம் ஒன்றில் போதகராக உள்ளாா். இவரின் மனைவி பிளாரன்ஸ் ஜாஸ்மின் (46). இவா், தக்கலை அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு வந்த பிளாரன்ஸ் ஜாஸ்மின் திங்கள்கிழமை காலை பணி நேரம் முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். தக்கலையை அடுத்த மணலி, பனவிளை பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தனியாா் சுற்றுலாப் பேருந்து இவா் மீது மோதியது.
Advertisement
Advertisement
இதில், தூக்கி வீசப்பட்டு இவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் பிளாரன்ஸ் ஜாஸ்மின் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஈரோட்டைச் சோ்ந்த சுற்றுலாப் பேருந்து ஓட்டுநா் நந்தகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.