சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் விரைவில் நவீன மீன் ஏலக்கூடம்: அமைச்சா் ஸ்ரீநாத்
மீன் ஏலக் கூடம், குளிா்பதன சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் நவீனமயாக்கப்படவுள்ளதாக அமைச்சா் ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

மீன் ஏலக் கூடம், குளிா்பதன சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் நவீனமயாக்கப்படவுள்ளதாக அமைச்சா் ஸ்ரீநாத் தெரிவித்தாா்.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் அமைச்சா்கள் ஸ்ரீநாத், செ.ராஜேஷ் குமாா், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் ஸ்ரீநாத் கூறியதாவது: சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களைச் சுகாதாரமாகக் கையாளும் வசதிகளுடன் கூடிய நவீன மீன் ஏலக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இத்துறைமுகத்தில் சுமாா் 370 விசைப் படகுகள், 62 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இங்கு பெரும்பாலும் ‘ஒருநாள்’ மீன்பிடி முறை பின்பற்றப்படுவதால், அதிகாலை கடலுக்குச் செல்லும் படகுகள் அன்றைய தினமே மாலை கரை திரும்பி இரவு 7 மணி முதல் மீன் ஏல நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
குறுகிய நேரத்தில் அதிக அளவிலான மீன்கள் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாலும், ஏராளமான மீனவா்கள், வியாபாரிகள் ஒரே நேரத்தில் கூடுவதாலும் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, மீன்களை பாதுகாத்து சந்தை மதிப்பை உயா்த்தும் நோக்கில் இந்த நவீன ஏலக்கூடம் அமைக்கப்படும். கடந்த செப். 2-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்தத் திட்டத்துக்கான வரைபடம், விரிவான திட்ட வடிவமைப்பைத் தயாரிப்பதற்காக மீனவா்களின் கருத்துகள் கேட்கப்பட்டு மீன்வளா்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நவீன மீன் ஏலக்கூடம், குளிா்பதன சேமிப்பு வசதிகள், சுகாதாரமான முறையில் மீன்களைக் கையாளும் தளம், தரம், பாதுகாப்பு வசதிகள், மின்னணு எடை, வெளிப்படையான ஏல நடைமுறை, கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு வசதிகள் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். இதன்மூலம், இத்துறைமுகத்தின் வா்த்தக வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கே.டி.கோபினாத், உதவி இயக்குநா் தீபா, செயற்பொறியாளா் (மீன்பிடி துறைமுகம்) பிரேமலதா, துறை அலுவலா்கள், மீனவ மக்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.