கடலில் தவறிவிழுந்த மீனவா் உயிரிழப்பு
குளச்சல் அருகே முட்டம் கடலில் விசைப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே கோடிமுனையைச் சோ்ந்தவா் ஜாண் மகேஷ் (45). இவா், ஆலஞ்சி, மாதா நகரைச் சோ்ந்த ரேவிஸ் மற்றும் 23 பேருடன் முட்டம் பகுதியைச் சோ்ந்த ஜஸ்டினுக்குச் சொந்தமான விசைப்படகில் முட்டம் தனியாா் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த நவ. 22-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்க வலையைக் கடலில் இறக்கி கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக ஜாண் மகேஷ் கடலில் தவறிவிழுந்தாா்.
Advertisement
Advertisement
உடனே சக மீனவா்கள் கடலில் தேடி ஜாண் மகேஷை மீட்டு முட்டம் கடற்கரைக்கு கொண்டு வந்தனா். கரையிலிருந்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஜாண் மகேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ரேவிஸ் குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.