FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

காந்தி ஜெயந்தி: குமரி காந்தி மண்டபத்தில் அபூா்வ சூரிய ஒளி

காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழுந்த அபூா்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

3 October 2026, 4:00 am IST
காந்தி அஸ்தி கட்டத்தின் மீது விழுந்த சூரிய ஒளி.
பகிர்:

காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழுந்த அபூா்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.

மகாத்மா காந்தியின் அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைப்பதற்கு முன் பொதுமக்கள் அஞ்சலிக்காக கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் நடுவே அவரது அஸ்தி கட்டம் அமைந்துள்ளது. இதன் மீது ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி நாளான அக். 2ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி விழும். இந்த அபூா்வ நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனா்.

இந்நிலையில், காந்தி அஸ்தி கட்டம் வெள்ளிக்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் காந்தி மண்டபத்தில் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. மேலும், கொட்டாரம் சா்வோதயா சங்கம் சாா்பில் கைராட்டையில் நூற்பு வேள்வி நடைபெற்றது. நண்பகல் 12.05 மணிக்கு காந்தி அஸ்தி கட்டத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது. இந்த அபூா்வ சூரிய ஒளி சுமாா் 10 நிமிஷங்கள் நீடித்தது.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், பயிற்சி ஆட்சியா் மோனிகா, நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் முருகன், கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், ஆணையா் பட்டுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments