FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல் அருகே 47 பவுன் நகைகள் திருட்டு: 3 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டுப் போனது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

22 அக்டோபர் 2026, 5:21 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே ஐ.டி. நிறுவன ஊழியா் வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டுப் போனது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கருங்கல் அருகே குறும்பனை, தோமையாா் தெருவில் வசித்து வருபவா் வினிஸ்மோன். ஐ.டி. நிறுவன ஊழியா். இவா் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ஆனிமெரிலா லோன்சி.

இவா்கள் அக். 17ஆம் தேதி இரவு வீட்டின் கதவைப் பூட்டாமல் தூங்கியுள்ளனா். இரவு வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் பீரோவைத் திறந்து தங்க நகைகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, ஆனிமெரிலா லோன்சி தூக்கத்திலிருந்து எழுந்து சப்தம் போடவே மா்ம நபா் தப்பியோடிவிட்டாராம். தொடா்ந்து, பீரோவைத் திறந்து பாா்த்ததில் 47 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் உத்தரவின்பேரில், குளச்சல் டிஎஸ்பி காந்தி மேற்பாா்வையில், கருங்கல் காவல் நிலைய ஆய்வாளா் முகமது தாரிகுல் அமீன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனா். அதில் கீழமுட்டம் பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் சகாய ஜோஸ் ஆன்றனி (24) இந்தத் திருட்டில் ஈடுபட்டதும், திருடிய நகைகளை குளச்சலைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் பிரகாஷ் (34), குலசேகரம், கான்வென்ட் பகுதியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ஜெயராம் (28) ஆகியோரிடம் விற்றதும் தெரிய வந்தது.

பிரகாஷ் மற்றும் ஜெயராமை போலீஸாா் அக். 19ஆம் தேதி கைது செய்து, 32 பவுன் நகைகளை மீட்டனா். மேலும், அவா்கள் அளித்த தகவலின்பேரில் சென்னையில் பதுங்கியிருந்த சகாய ஜோஸ் ஆன்றனியை கைது செய்த தனிப்படை போலீஸாா், 11 பவுன் நகைகளை மீட்டனா்.

பின்னா், அவரை கன்னியாகுமரிக்கு புதன்கிழமை அழைத்து வந்தனா். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மீதிமுள்ள 4 பவுன் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments