FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாநகரில் குற்றச்செயல்களைத் தடுக்க பிரதான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் நகை பறிப்பு சம்பவங்களை அடுத்து பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் நகை பறிப்பு சம்பவங்களை அடுத்து பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகரில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரிகள் சங்கத்தினர், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சமூக அமைப்புகள், பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

அப்போது, விரிவாக்கப் பகுதிகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்; மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள போலீஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; மாநகரத்தில் உள்ள 8 காவல்நிலையங்களை 15 காவல்நிலையங்களாக அதிகரிக்க வேண்டும்; வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்; குற்றச் சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது; மருத்துவமனை, பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களில் அவசர தேவைக்காக டீ, காபி, பால் கிடைக்கும் வகையிலான கடைகளுக்கு இரவு நேரத்தில் அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் பொதுமக்களின் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதற்கு பதிலளித்து மாநகரக் காவல்துறை குற்றம், போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் ராஜன் கூறியது:

கடந்த ஒரு வாரமாக நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பது என்பது உண்மைதான். இதனை தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையாக 12 பைக்குகளில் இரவு நேர ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகர பொதுமக்களின் எண்ணிக்கைக்கு தகுந்த போலீஸார் இல்லை.

எனினும், குறைந்த எண்ணிக்கையில் உள்ள காவலர்களைக் கொண்டு குற்றங்களை முழுமையாக தடுக்க முயன்று வருகிறோம். பொதுமக்களும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

குற்றங்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் மாநகரக் காவல்துறை மூலம் பிரதான இடங்களில் ரூ.30 லட்சத்தில் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான வரைபடம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

சட்டம்-ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் டி.பி. சுரேஷ்குமார் கூறியது:

குற்றங்கள் குறைய வேண்டுமெனில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான வழக்குகளில் சாட்சி சொல்ல யாரும் முன்வருவதில்லை. மேலும், கைது நடவடிக்கையே போதும் என்ற நிலையில் புகார்தாரர்கள் இருந்து விடுகின்றனர். ஒரு வழக்கில் தண்டனை பெற்றுத்தரும் வரையில் புகார்தாரர் ஓயக் கூடாது.

குடியிருப்புதாரர்கள் தங்களுக்குள் சமூக குழுக்களை அமைத்து இரவு ரோந்துப் பணிக்கு காவல்துறைக்கு உதவ வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments