FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம்: நெல்லை தொகுதியில் 302 வாக்குச் சாவடிகளில் அறிமுகம்

வரும் பேரவைத் தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான "வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம்' (விவிபிஏடி) எனும் புதிய மின்னணு இயந்திரம், திருநெல்வேலி தொகுதியில், 302 வாக்குச் சாவடிகளில் முதன்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வரும் பேரவைத் தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிந்துகொள்ளும் வகையிலான "வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம்' (விவிபிஏடி) எனும் புதிய மின்னணு இயந்திரம், திருநெல்வேலி தொகுதியில், 302 வாக்குச் சாவடிகளில் முதன்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம் என 10 பேரவைத் தொகுதிகள் உள்ளன. 10 தொகுதிகளிலும் சேர்த்து 12,10,527 ஆண் வாக்காளர்கள், 12,41,079 பெண் வாக்காளர்கள், திருநங்கையினர் 60 என, 24 லட்சத்து 51 ஆயிரத்து 66 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலை புனரமைத்தல், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தொகுதியைத் தேர்வுசெய்து அங்குள்ள வாக்குச் சாவடிகள் அனைத்திலும் "விவிபிஏடி' எனும் இயந்திரம் கூடுதலாகப் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் உதவியால், யாருக்கும் வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

Advertisement

Advertisement

10 தொகுதிகளில் திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் மட்டும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்காக, பிகார் மாநிலத்திலிருந்து 386 இயந்திரங்கள் திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை வந்தன. இவற்றை, ஆட்சியர் மு. கருணாகரன், அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் ஆய்வுசெய்தார். பின்னர், ஸ்ரீபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் அந்த இயத்திரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து, அவர் கூறியது:

இந்த இயந்திரம் கடந்த முறை ஆர்கே நகர் தொகுதியில் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி தொகுதியில் உள்ள 302 வாக்குச்சாவடிகளில் பொருத்துவதற்காக பிகார் மாநிலத்திலிருந்து 386 இயந்திரங்கள் வந்துள்ளன.

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள இந்த இயந்தரத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்ததும் அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரத்திலிருந்து வரும் அச்சிட்ட காகிதத்தில் தெரிந்துகொள்ளலாம். இதை வாக்காளர்கள் மட்டுமே பார்க்க முடியும். இந்தச் சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சீட்டு இயந்திரத்தின் மறுபக்கத்தில் உள்ள சிறிய பெட்டிக்குள் விழுந்துவிடும்.

 இந்த இயந்திரத்தை பயன்படுத்துவது, செயல்படும் விதம் குறித்து கட்சிப் பிரமுகர்கள், தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். பின்னர், பொதுமக்கள் முன்னிலையில் செயல் விளக்கம் அளிக்கப்படும் என்றார் ஆட்சியர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராகவேந்தர், உதவி ஆணையர் (கலால்) ராமசுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments