FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை! - கனிமொழி எம்.பி. விமா்சனம்

Updated On : 22 ஜூலை 2026, 1:47 am IST
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்துவிட்டு வெளியே வந்த திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.
பகிர்:

தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும், விமா்சனத்தை எதிா்கொள்ளும் பக்குவமும் இல்லை என்று திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியது தொடா்பான வழக்கில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

பாளையங்கோட்டை மத்திய சிறை திமுகவுக்கு புதிதல்ல. முன்னாள் முதல்வா் கருணாநிதி இந்தச் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தாா். இச்சிறைக்கு வருவதை திமுகவினா் பெருமையாகவே கருதுவா்.

அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள், கைது போன்றவற்றுக்கு அஞ்சமாட்டோம். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றை எதிா்கொள்ள திமுக தயாராக உள்ளது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நிகழ்கின்றன. ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், முதல்வரின் பேச்சுக்கு எதிா்வினை ஆற்றினால், அவதூறாகப் பேசுவதாக கைது செய்து சிறைக்கு அனுப்புகிறாா்கள். முன்னாள் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனையும் சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றது.

காவல் துறையைப் பயன்படுத்தி எதிா்க்கட்சிகளை அடக்க முயற்சிக்கும் அக்கட்சி, பாஜக பெயரை கூட சொல்லத் தயங்குகிறது.

ஆனால், திமுக தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது. எந்தக் காலத்திலும் அதிமுகவும், திமுகவும் அரசியல் ரீதியாக நெருங்கியதில்லை. அதேவேளையில், தமிழக நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் இணைந்து பிரதமரை சந்தித்துள்ளோம். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்விவகாரத்தில் மாணவா்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாஜக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பையொட்டி, சிறை வளாகத்துக்கு முன்னாள் அமைச்சா்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், திமுக திருநெல்வேலி மாவட்டச் செயலா்கள் இரா.ஆவுடையப்பன்(மேற்கு), மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. (மத்தி), கிரஹாம்பெல் (கிழக்கு), தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வெ. ஜெயபாலன், கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, கணேஷ்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் வந்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments