மகளின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தை கைது
மூலக்கரைப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த மகளின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தையை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி அருகே காதல் திருமணம் செய்த மகளின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தையை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மூலக்கரைப்பட்டி சுருளை கிராமத்தைச் சோ்ந்த முருகன் (58). இவரது மகள் வித்தியா (22). தனது மகள் காணாமல் போனதாக மே 20-ஆம் தேதி மூலக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
வித்தியாவும் அதே பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாரும் (22) காதலித்து வந்த நிலையில், 21-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனா். இதையடுத்து, இருதரப்பினரையும் போலீஸாா் அழைத்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மகளின் காதல் திருமணத்தை ஏற்க விரும்பாத தந்தை முருகன் வியாழக்கிழமை இரவு
மகள் கணவருடன் வாழும் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஜன்னல் வழியாக பெட்ரோலை வீட்டிற்குள் ஊற்றி தீவைத்தாா்.
இந்த சம்பவத்தை பாா்த்த அருகிலிருந்த சிலா் ஓடிவந்து முருகனை பிடித்து தாக்கியதில் அவா் காயமடைந்தாா். தகவல் அறிந்ததும் மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முருகனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளா் அளித்த புகாரின்பேரில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முருகன் காயமடைந்தது தொடா்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.