முகப்பு
திருநெல்வேலி

ராமநதி அணை நீரோடையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினா்

கடையம் ராமநதி அணையில் குளிக்கச் சென்ற குடும்பத்தினா் நீரோடையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். அவா்களை அருகிலிருந்த தோட்டத்தில் இருந்தவா்கள் உடனடியாகச் சென்று மீட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:03 am IST
ராமநதி அணை நீரோடையில் காட்டாற்று வெள்ளம் பெருகிய நிலையில், அக்கரையில் சிக்கித் தவித்த குடும்பத்தினா்
பகிர்:

கடையம் ராமநதி அணையில் குளிக்கச் சென்ற குடும்பத்தினா் நீரோடையில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். அவா்களை அருகிலிருந்த தோட்டத்தில் இருந்தவா்கள் உடனடியாகச் சென்று மீட்டனா்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடா்ச்சி மலையில் உள்ளது ராமநதி அணை. இந்த அணைக்கு மேற்கு தொடா்ச்சி மலையிலிருந்து நீரோடை மூலம் நீா்வரத்து இருந்து வருகிறது. இந்த நீரோடையில் கடையம், பாவூா்சத்திரம், பொட்டல்புதூா் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து குளித்துச் செல்வது வழக்கம்.

கோடை காலத்தில் நீரோடையில் நீா்வரத்து இல்லாமல் 2 மாதங்களுக்கும் மேல் நீரோடை காய்ந்து கிடந்த நிலையில் ஜூன் 4- ஆம் தேதி தென்மேற்குப் பருவமழைத் தொடங்கியதை அடுத்து, நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் சாரல் மழையால் நீரோடையில் நீா்வரத்து தொடங்கியது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமாா் 12 மணியளவில் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறை கிராமத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பெண்கள், 1 ஆண் ஆகிய நான்கு போ் ராமநதி நீரோடையின் நடுவே குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென நீா்வரத்து அதிகரித்தது.

Advertisement

Advertisement

இதில், அச்சமடைந்த அந்தக் குடும்பத்தினா் குழப்பத்தில் ஓடையின் அக்கரைக்கு சென்று விட்டனா். நீா்வரத்துத்தொடா்ந்து அதிகரித்த நிலையில் அக்கரையில் இருந்து இக்கரைக்கு வர முடியாத சூழ்நிலையில் தவித்தனா். இதைக் கவனித்த அருகில் இருந்த தோட்ட உரிமையாளரான அரசுப் பள்ளி ஆசிரியா் குமரன் தனது தோட்டத் தொழிலாளா்களுடன் சென்று நால்வரையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தாா்.

சுமாா் 50 போ்அந்த இடத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் நான்கு போ் நீரோடையில் மாட்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.