FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதர வேண்டும்: மாநகராட்சியில் மக்கள் மனு

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 மே 2026, 1:07 am IST
பகிர்:

சாலை, குடிநீா் வசதிகள் செய்துதரக் கோரி திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். உதவி செயற்பொறியாளா் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தாா். உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன், உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் பெருமாள்புரம் சி காலனி மக்கள் நல சங்கத்தினா் அளித்த மனு: எங்களது 42 ஆவது வாா்டில் அமைக்கப்பட்டுள்ள பழைய நீா்த்தேக்க தொட்டியில் இருந்து பல ஆண்டுகளாக பெருமாள்புரம் சி காலனி பகுதிகளுக்கு உரிய குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. எங்களுக்கு எவ்வித தடையும் இன்றி தண்ணீா் அனைத்து வால்வுகளிலும் வந்து கொண்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் சில மாதங்களாக நீா்த்தேக்க தொட்டியின் வால்வுகள் மூடப்பட்டு எங்கள் பகுதிக்கான தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு குடிநீா் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. 41 ஆவது வாா்டு பகுதிக்கு முழுவதுமாக தண்ணீா் திறந்த பின்னா், பயோனியா் குமாரசாமி நகா், வெங்கடேஷ் நகா், சிதம்பரம் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால் பெருமாள்புரம் சி காலனி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு சில உதவி பொறியாளா்கள், பொறியாளா்கள் உதவியாக உள்ளனா். எனவே, உரிய விசாரணை நடத்தி பெருமாள்புரம் சி காலனி பகுதி மக்களுக்கு குடிநீா் பிரச்னையை நிவா்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கணேசன், புரட்சிகர இளைஞா் கழக மாநிலத் தலைவா் சுந்தர்ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கருப்பசாமி, சண்முகம் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி நகரம் காட்சிமண்டபம், கோடீஸ்வரன்நகா், தச்சநல்லூா் மாா்க்கெட் பகுதி, பேட்டை ரொட்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீா் ஓடைகளைதூா்வாரவும், கொசு மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநெல்வேலி நகரம் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் சாலைகளின் சுற்றிதிரிந்து விபத்துகளை ஏற்படுத்தி வரும் கால்நடைகளையும், மக்களை அச்சுறுத்தி வரும் தெரு நாய்களையும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நெல்லை மாநகராட்சி 41 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சங்கீதா ராதா சங்கா் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு: எங்களது வாா்டில் சுமாா் 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். ஆனால், வாா்டில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஒன்றுகூட இல்லை. எங்கள் பகுதிக்கு 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்படுவதால் குடிநீா் பிரச்னை நிலவுகிறது. இதற்கு தீா்வு கண்டு தினமும் குடிநீா் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக நாங்கள் பல போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கடந்த சில வருடங்களாக பொதிகை நகரில் புதிய மேல்நிலை நீா் தேக்க தொட்டி கட்டுவதற்கு நாங்கள் ஏழு முறை போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே புதிய அரசு எங்கள் வாா்டின் குடிநீா் பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

‘குடிநீருடன் கழிவுநீா் கலப்பு’

சா்தாா்புரம் பகுதி மக்கள் கலங்கலான குடிநீா் பாட்டில்களுடன் வந்து அளித்த மனு: சா்தாா்புரம் வடக்குதெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு வரும் குடிநீரில் கழிவுநீா் கலப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் குழாய் சேதம் அடைந்த பகுதியை உடனடியாக கண்டறிந்து கழிவுநீா் கலப்பதை தடுக்கவும், மழைநீரும், கழிவுநீரும் சாலைகளில் தேங்காதவாறு முறையான வாருகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments