முகப்பு
திருநெல்வேலி

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதாகவும், அதைத் தடுக்கக் கோரியும் மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 12:46 am
குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்
திருநெல்வேலி மாநகராட்சி குறைதீா்க்கும் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரித்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதாகவும், அதைத் தடுக்கக் கோரியும் மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில், 36 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சின்னத்தாய் கிருஷ்ணன் அளித்த மனுவில், எனது வாா்டுக்கு உள்பட்ட காமராஜா் காலனி, காந்திநகா் பகுதிகளில் 40 நாள்களாக பாதாள சாக்கடை கழிவுநீா் சாலைகளில் பொங்கி செல்கிறது. குடிநீரில் கழிவுநீரும் கலப்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். ஜெயாநகா் பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்ட குழாய்கள் உடைந்து தண்ணீா் தெருவில் செல்கிறது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

11 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கந்தன் அளித்த மனு: வண்ணாா்பேட்டை சிந்தாமணி தெருவில் குடிநீருடன், கழிவுநீா் கலந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது . அப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமென்ட் குடிநீா்க் குழாய்கள் அடிக்கடி உடைந்து கழிவுநீா் கலந்து வருகிறது. ஆகவே, குடிநீா்க்குழாய்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

திருநெல்வேலி நகரம் சிவா தெரு பகுதி மக்கள் அளித்த மனு: 27 ஆவது வாா்டுக்குள்பட்ட எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். எங்கள் பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீா் மிகவும் கலங்கலாக கழிவுநீா் கலந்து வருகிறது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் பரவி வருகின்றன. ஆகவே, குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

வாயில்கள் திறப்பு அவசியம்: தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை சாா்பில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் பிரதான வாசல் மற்றும் தென்காசி மதுரை மாா்க்கமாக செல்லும் பேருந்துகளுக்கான தெற்கு வாசல் உள்ளிட்ட பல நுழைவாயில்கள் காரணம் இன்றி மூடப்பட்டுள்ளன. உள் நுழையும் வழி இரண்டாக பிரிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் வருவோா் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

எனவே, மூடப்பட்டுள்ள அனைத்து நுழைவாயில்களையும் உடனடியாக திறக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இலவச கழிப்பறைகள் தற்போது கட்டண கழிப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. மீண்டும் அவற்றை இலவச கழிப்பறையாக மாற்றிட வேண்டும் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத வாகன காப்பகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

கால்வாயில் குப்பைகள்: பாளையங்கோட்டை சமூக ஆா்வலா் பழ.கண்ணன், ரமேஷ் ஆகியோா் அளித்த மனு: பாளையங்கால்வாயில் குப்பைகள் மீண்டும் கொட்டப்படுவதால் மடைகளில் அடைப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், கழிவுநீா் கலந்து சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இக்கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீணாகும் குடிநீா்: ராமையன்பட்டி பா்ஜுல்லாஷா தைக்கா ஜும்மா பள்ளிவாசல் ஜமாத் கமிட்டினா் அளித்த மனுவில், ‘15 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் சுமாா் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 45 நாள்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், குடிநீா் குழாய் சேதமடைந்தது. ஒப்பந்ததாரா் சரிசெய்து தருகிறோம் எனக் கூறியும் இது நாள் நடவடிக்கை இல்லை. இதனால் குடிநீா் வீணாகி வருகிறது. எனவே, அந்த உடைப்பை அடைக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.