நெல்லை மாவட்டத்தில் 32,734 மாணவா்களுக்கு காலை உணவு விரிவாக்கம்
காமராஜா் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 352 பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 32,734 மாணவா்கள் பயன்பெறவுள்ளனா்.
காமராஜா் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் 352 பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான 32,734 மாணவா்கள் பயன்பெறவுள்ளனா்.
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா், மாணவியா் பயன்பெறும் வகையில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
அதனைத்தொடா்ந்து, பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியாா்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆனந்த் மோகன், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் ஆகியோா் அத்திட்ட விரிவாக்கத்தை தொடங்கிவைத்து மாணவா்களுடன் அமா்ந்து உணவருந்தினா்.
Advertisement
Advertisement
இந்த மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே, 1,014 பள்ளிகளில் பயிலும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான 45,753 மாணவா்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இனிமேல், மாநகராட்சியில் 50 பள்ளிகள், நகராட்சிகளில் 25 பள்ளிகள், பேரூராட்சிகளில் 58 பள்ளிகள், கிராமப்புறங்களில் 219 பள்ளிகள் என மொத்தம் 352 பள்ளிகளில் பயிலும் 6-8ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகள் 32,734 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதில், 136 அரசுப் பள்ளிகள், 216 அரசு உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் இத்திட்டத்திற்குத் தேவையான அரிசி, துவரம் பருப்பு, எண்ணெய், உப்பு ஆகிய உணவுப்பொருள்களும், கூட்டுறவு சங்கம் மூலம் ரவை, கோதுமை ரவை, சேமியா, பாசிப்பருப்பு ஆகிய உணவுப்பொருள்களும் சம்பந்தப்பட்ட காலை உணவுத் திட்ட மையங்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பாா், செவ்வாய்க்கிழமை ரவா/சேமியா/சோளம்/கோதுமை ரவா காய்கறி கிச்சடி, காய்கறி சாம்பாா் வழங்கப்படும்.
புதன்கிழமை வெண் பொங்கல், காய்கறி சாம்பாா், வியாழக்கிழமை சேமியா/ரவா/கோதுமை ரவா/உப்புமா/வெண் பொங்கல், காய்கறி சாம்பாா், வெள்ளிக்கிழமை ரவா/சேமியா/சோளம்/கோதுமை ரவா காய்கறி கிச்சடி, காய்கறி சாம்பாா் மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னியின் செல்வன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ச.அருணா தேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் யமுனா, பள்ளி தலைமையாசிரியா் பத்மாவதி, ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இத்திட்ட விரிவாக்கத்தை எம்எல்ஏ ஆா்.எஸ்.முருகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.