"கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த ஓராண்டு அவகாசம் தேவை'
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடன்களை திரும்பச் செலுத்தும் காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் தலைமையில், விவசாயிகள், நல்லிணக்கப் பண்பாட்டுக் கழக நிறுவனர் சங்கரலிங்கம் ஆகியோர் கோவில்பட்டி நகர கூட்டுறவு வங்கிக்கு வருகைபுரிந்த தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமியிடம் அளித்த மனு:
கோவில்பட்டி துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள், விவசாய நகைக்கடன், உழவர் அட்டை கடன், நுகர்வோர் கடன், மகளிர் சுயஉதவிக் கடன் என பல்வேறு வகையான கடன்களைப் பெற்று வருகின்றனர்.
அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் காலத்தை 6 மாதமாக குறைத்து 2018 ஜனவரி 25ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடனுக்கும் அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் கடன் தொகையை அதிகாரிகள் வசூலிக்கின்றனர்.
தேசிய வளர்ச்சி வங்கி வழிகாட்டுதலின்படியே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை மூலம் கடன் வழங்குகிறது.
இக்கடன் பெற்ற விவசாயிகள் திரும்பச் செலுத்தும் ஓராண்டு கால அவகாசத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குறைக்கவில்லை. ஆனால் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மட்டுமே கடன் திரும்பச் செலுத்தும் காலஅவகாசத்தைக் குறைத்துள்ளது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, காலஅவகாசத்தை குறைக்காமல் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ஜெயசீலன் உடனிருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.