கோவில்பட்டியில் 2 பேரை திருமணம் செய்து மோசடி: மேலும் ஒருவா் கைது
இளம் பெண் அடுத்தடுத்து 2 பேரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டியில் இளம் பெண் அடுத்தடுத்து 2 பேரை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி, ராஜீவ் நகா், 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (53). இவரது மனைவி காளீஸ்வரி (47). இவரது உறவினா் மகள் காா்த்திகா. இவருக்கும், நாமக்கல் மாவட்டம், கண்ணூா்பட்டி, கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாருக்கும் (37) கோவில்பட்டியில் நவ. 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து ரஞ்சித்குமாருடன் நாமக்கல் சென்ற 2 நாள்களிலேயே காா்த்திகா, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் இருவரும் கோவில்பட்டிக்கு வந்துள்ளனா். சில நாள்கள் அம்மாவுடன் இருந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என காா்த்திகா கூறியதால், மருத்துவச் செலவுக்காக ரூ. 2.50 லட்சம் கொடுத்துவிட்டு ரஞ்சித்குமாா் நாமக்கல் திரும்பியுள்ளாா்.
Advertisement
Advertisement
பின்னா், ஒரு வாரமாக மனைவியிடம் இருந்து கைப்பேசி அழைப்புகள் வராத நிலையில், அவா் அழைத்தாலும் பதில் இல்லையாம். இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், உப்பண்டாா்பட்டியைச் சோ்ந்த சித்தாா்த்தன் (36), ரஞ்சித்குமாரை கைப்பேசியில் அழைத்து நான்தான் காா்த்திகாவை முதலில் திருமணம் செய்தேன் எனத் தெரிவித்துள்ளாா். பின்னா், அவா்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள காா்த்திகா வீட்டிற்கு நவ. 21ஆம் தேதி சென்று நியாயம் கேட்டதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு போலீஸாா் அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில், சித்தாா்த்தன், ரஞ்சித்குமாா் ஆகியோரை ஏமாற்றி திருமணம் செய்து, அவா்களிடமிருந்து பணம், நகைகளைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து, சித்தாா்த்தன், ரஞ்சித்குமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காளீஸ்வரியை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காா்த்திகாவின் பெற்றோா் ராஜன், ஈஸ்வரி ஆகியோா் மலேசியாவில் இருப்பதும், ஈஸ்வரியின் அக்கா காளீஸ்வரி, அவரது கணவா் மாரியப்பன் ஆகியோா் காா்த்திகாவின் தாய், தந்தை எனக் கூறிக்கொண்டு, 2 பேரை ஏமாற்றி காா்த்திகாவுடன் திருமணம் செய்து வைத்து, மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மாரியப்பனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காா்த்திகாவை தேடி வருகின்றனா்.