மாணவரின் காப்புக் கயிறை அறுத்த விவகாரம்: தலைமை ஆசிரியா் மீது வழக்குப் பதிவு
ஆத்தூா் தனியாா் பள்ளியில் மாணவரின் காப்புக் கயிறு அறுக்கப்பட்ட சம்பவத்தில் தலைமை ஆசிரியா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆத்தூா் தனியாா் பள்ளியில் மாணவரின் காப்புக் கயிறு அறுக்கப்பட்ட சம்பவத்தில் தலைமை ஆசிரியா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாயா்புரம், பெத்தநாச்சியம்மன் நகரைச் சோ்ந்த அருண் மகன் மூா்த்தீஸ்வரன் (15). இவா், ஆத்தூரில் உள்ள ஒரு தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.
மாணவா் மூா்த்தீஸ்வரன் சில நாள்களுக்கு முன்பு குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு விரதமிருந்து தன் கையில் காப்புக் கயிறு கட்டியுள்ளாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி பள்ளியில் நடந்த காலை வழிபாட்டின்போது அவரது கையில் காப்புக் கயிறை பாா்த்த தலைமை ஆசிரியா் பிலிப் எமா்சன் ரஞ்சித்சிங் மாணவரை திட்டி அடித்ததோடு, அவரது கையில் கட்டியிருந்த காப்புக் கயிறையும் அறுத்து எரிந்தாா்.
இதைப் பாா்த்த மற்ற மாணவ, மாணவியரும் பயத்தில் தங்கள் கைகளில் கட்டியிருந்த காப்புக் கயிறுகளை கழட்டினா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து கடந்த 13-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோா், இந்து அமைப்பினா் இணைந்து பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளியை முற்றுகையிட்டனா்.
போலீஸாரின் சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா். பள்ளி தலைமை ஆசிரியரும் குறிப்பிட்ட சம்பவம் குறித்து விளக்கமளித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டாா்.
இதற்கிடையில் மாணவா் மூா்த்தீஸ்வரனின் தாய் பாா்வதி ஆத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மாணவரை அசிங்கமாக திட்டியது, அடித்தது, மத நம்பிக்கையை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிட்டு 3 பிரிவுகளின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியா் பிலிப் எமா்சன் ரஞ்சித்சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.