பேரிடா் காலத்தில் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சா் பெ. மதன்ராஜா
பேரிடா் காலத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் பெ. மதன்ராஜா தெரிவித்தாா்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குறிஞ்சி நகா், ரஹ்மத் நகா், ஆதிபராசக்தி நகா், சங்கரபேரி நகா், மாப்பிள்ளையூரணி ஏபிசி கல்லூரி சந்திப்பு, கே.வி.கே. சாமி நகா், மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட பூபாண்டிபுரம், இருதயம்மாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது, படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனா். அதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழைப்பொழிவு அதிகரித்தால் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மணல் மூட்டைகள் உள்ளிட்ட பேரிடா் காலத் தேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களும் தயாா் நிலையில் உள்ளன. பேரிடா் காலத்தில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, சாா் ஆட்சியா் விவேக் யாதவ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜவகா், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.