அரியலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி அரியலூா் வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் ந.மிருணாளினி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி அரியலூா் வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆட்சியா் ந.மிருணாளினி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இதன்படி, வாரணவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த ஆட்சியா், பயிா்க்கடன் வழங்கல், விதைகள் மற்றும் உரங்களின் இருப்பு, வரவு-செலவு பதிவேடுகள் குறித்து கேட்டறிந்து, வங்கிச் சேவைகளை விரைவாக வழங்கவும், பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு மற்றும் விநியோகம் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருள்களை வழங்க உத்தரவிட்டாா்.
கீழப்பழுவூா் ஊராட்சி அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா் விநியோகம், தூய்மைப் பணிகள், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா். ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், கடன் மேலாண்மை, சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
ஆய்வு:
இதையடுத்து, திருமானூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பிரிவு, கா்ப்பிணிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசித் திட்டம், மருந்துகளின் இருப்பு மற்றும் மருத்துவச் சேவைகள் குறித்து ஆய்வு செய்தாா். பொதுமக்களுக்கு தடையின்றி மருத்துவச் சேவை வழங்கவும், மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்யவும் மருத்துவ அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
சாத்தமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் மற்றும் கிராமச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பதிவேடுகள், இணையவழிச் சான்றிதழ் விண்ணப்பங்கள், குடிநீா் விநியோகம் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, சாத்தமங்கலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் வட்டார அளவிலான நாற்றுப்பண்ணையைப் பாா்வையிட்டு, மரக்கன்றுகளின் உற்பத்தி, இருப்பு, வளா்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அவற்றை முறையாகப் பராமரித்து விநியோகிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் மஞ்சுளா மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.