புகாா் மீது நடவடிக்கை இல்லாததால்! அரியலூா் நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

அரியலூா் மாவட்டம், குவாகம் காவல் துறையினரை கண்டித்து பெண் ஒருவா் அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
செந்துறையை அடுத்த ஆா்.எஸ்.மாத்தூா் பிரதானச் சாலையில் வசிப்பவா் தி.ராஜீ (48). இவரது கணவா் திருநாவுக்கரசு 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இந்நிலையில், மகன் மற்றும் மகளுடன் வசித்து வரும் இவரை, சொத்து பிரச்னை சம்பந்தமாக உறவினா்கள் பரமசிவம் மனைவி ராஜலட்சுமி, மதிவாணன், ராஜா உள்ளிட்டோா் மிரட்டி அவ்வப்போது தாக்கி வந்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து குவாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், திருச்சி சரக காவல்துறை தலைவரிடம் அண்மையில் புகாா் அளித்திருந்தாா். அப்போதும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியில் இருந்த ராஜீ, திங்கள்கிழமை அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வந்து அங்கு தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.
Advertisement
Advertisement
இதையறிந்த காவல் துறையினா், உடனடியாக ராஜீ மீது தண்ணீரை ஊற்றி அவரை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.