முகப்பு
அரியலூர்

நலிவடையும் அகல் விளக்குகள் தயாரிப்புத் தொழில்

அரியலூரில் நலிந்துவரும் அகல் விளக்குகள் தயாரிப்புத் தொழிலைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

24 நவம்பர் 2026, 6:30 am
நலிவடையும் அகல் விளக்குகள் தயாரிப்புத் தொழில்
சோழாதேவி கிராமத்தில் வெள்ளிக்கிழமை அகல் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளி வேல்முருகன் குடும்பத்தினா்.
பகிர்:

அரியலூரில் நலிந்துவரும் அகல் விளக்குகள் தயாரிப்புத் தொழிலைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நிகழாண்டு காா்த்திகை தீபத் திருநாள் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் அகல் விளக்குகளை ஏற்றும் மக்களுக்கு வெளிச்சம் கிடைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த விளக்குகளை உற்பத்தி செய்பவா்களின் வாழ்வில் இன்னமும் ஒளி பிறக்கவில்லை என்பதே உண்மை.

மாற்றுத் தொழிலை நாடும் நிலை: தற்போது சீமை ஓடுகள், பீங்கான்களில் காா்த்திகை தீப விளக்குகளை பல நிறுவனங்கள் தயாரித்து விற்பதால் மண்பாண்டத் தொழில் செய்யும் பல குடும்பங்கள் மாற்றுத் தொழிலை தேடிச் சென்றுள்ளன.

Advertisement

Advertisement

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள தோழாதேவி கிராமத்தில் 10 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண் பானை, சட்டிகள், அகல் விளக்குகள் செய்யும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மண்பாண்டத் தொழிலாளி கூறியது: காலம் காலமாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதைவிட்டால் எங்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாது.

முன்பெல்லாம் மண்பாண்டங்களைப் பயன்படுத்திய மக்கள் நோய்கள் இல்லாமல் இருந்தனா். ஆனால் மண்பாண்டங்களை விட்டுவிட்டு, பிளாஸ்டிக், அலுமினியப் பொருள்களை பயன்படுத்தியதில் இருந்து நோய்களும் ஏற்படத் தொடங்கிவிட்டன.

நலிவடையும் தொழில்: மண்பாண்டத் தொழிலும் நலிவடையத் தொடங்கிவிட்டது. நவீன காலத்துக்கு ஏற்ப சீமை ஓடுகள், பீங்கான்களில் விளக்குகள் செய்கிற பெரிய நிறுவனங்கள் பெருகிவிட்டன. முன்பெல்லாம், காா்த்திகை தீபத் திருநாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே எங்களுக்கு நிறைய ஆா்டா் கிடைத்தது.

ஆனால், சீமை ஓடுகள், பீங்கான்களில் விளக்குகள் வந்த பிறகு ஆா்டா்கள் குறைந்து எங்க தொழில் நஷ்டமானது. எனவே நாங்களும் நாட்டு ஓடுகள், பீங்கான்களில் விளக்கு தயாரிப்புக்கு 2 ஆண்டுகளுக்கு முன் மாறிப் பாா்த்தோம்.

ஆனால், காலம் காலமாக காா்த்திகை விளக்கு என்றாலே மண்தான் என்பதால், எங்களால் அதை மாற்ற முடியவில்லை. எனவே பழைய முறைக்கே மாறிவிட்டோம்.

ஐப்பசி மாதத் தொடக்கத்திலேயே நாங்கள் விளக்குகள் செய்யத் தொடங்கிவிட்டோம். காவிரியில் கிடைக்கும் வண்டல் கலந்த மணல், குளத்தின் களிமண், திடல் மண் மூன்றையும் அள்ளி வந்து, பதமாக்கி கலந்து, அதை ஒருநாள் முழுக்க மிதித்து, நல்ல பதத்துக்கு வந்ததும், கைகளால் வாா்த்தெடுத்து விளக்குகள் தயாரித்து வருகிறோம்.

நிவாரணத் தொகையை உயா்த்த வேண்டும்: தமிழகம் முழுவதும் மண்பாண்டம் செய்வோரின் நிலையும் இதுதான். எனவே, ஐப்பசி மற்றும் காா்த்திகை மாதங்களில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயா்த்தி, காலம் கடத்தாமல் வழங்க வேண்டும். கொள்ளிடத்தில் மண் எடுக்க எங்களுக்கு அதிகாரிகள் தொல்லை தரக் கூடாது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்ற அரசே எங்களுக்கு ஆா்டா் கொடுக்க வேண்டும். அப்போதுதான், இத் தொழிலை நம்பி இருக்கிற எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும் என்றனா்.

எனவே நலிவடையும் மண்பாண்டத் தொழிலை காக்க மண்பாண்டப் பொருள்களின் நன்மைகளை வெளிக்கொணர வேண்டும். குளங்களில் இருந்து மண் அள்ளுவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்பதே மண்பாண்ட தொழிலாளா்களின் கோரிக்கையாக உள்ளது.