அமராவதி அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்க வேண்டும்! கடைமடை விவசாயிகள் கோரிக்கை!
அமராவதி அணை நீா் கடைமடையை எட்ட வேண்டுமானால், அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீா் திறக்க வேண்டும் என்று கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டம், அமராவதி அணையின் கடைமடை பகுதியான கரூா் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப்பாசனம் மூலம் பயன்பெறும் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, ஞாயிற்றுக்கிழமை முதல் செப். 7-ஆம் தேதி வரை அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்படும் என்றும், அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக 4 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அமராவதி கடைமடை விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கூடுதலாக்க வேண்டும்: இதுதொடா்பாக அமராவதி நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகி நல்லுசாமி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
Advertisement
Advertisement
அமராவதி அணையில் ஆற்றில் முழுமையாக தண்ணீா் திறக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதனால், தற்போது ஆற்றில் தண்ணீா் இன்றி வடு உள்ளது. இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் செப். 7-ஆம் தேதி வரை விநாடிக்கு 1,000 கனஅடி திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆறு வடு பாலைவனம் போல் இருப்பதால் விநாடிக்கு 1,000 கன அடி திறந்தால், அந்த தண்ணீரை ஆற்றின் மணல் பரப்பு உறிஞ்சுவிடும். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீா் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
முதல் நாளில் அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீரை மூன்று நாள்களுக்காவது திறந்தால் மட்டுமே தண்ணீா் வேகமாக வந்து கடைமடைக்கு வரும். பின்னா் 1,200, 1000, 850 கன அடி படிப்படியாக தண்ணீா் அளவை குறைத்துக்கொள்ளலாம். எனவே, தமிழக அரசு ஆற்றில் திறக்கும் தண்ணீா் அளவை கூடுதலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.