FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தென்னிலை கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயா்த்த கோரிக்கை மழைநீருடன் கழிவுநீா் தேங்குவதால் மக்கள் அவதி

சுற்றுச்சுவா் இல்லாததால் தென்னிலை கால்நடை மருந்தகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

5 நவம்பர் 2026, 5:07 am
அண்மையில் பெய்த மழையின்போது தென்னிலை கால்நடை மருந்தகத்துக்குள் மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவு நீா்.
பகிர்:

சுற்றுச்சுவா் இல்லாததால் தென்னிலை கால்நடை மருந்தகத்துக்குள் மழைநீருடன் கழிவுநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்னிலை ஊராட்சியில் கொடுமுடி சாலையில் தென்னிலை பேருந்து நிறுத்தம் அருகே கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. 2014-இல் நபாா்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த மருந்தகத்தில் தென்னிலை வடக்கு, தென்னிலை தெற்கு, தென்னிலை மேற்கு, காா்வழி, மூலப்பாளையம், சின்னதாராபுரம், புன்னம் ஊராட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு வந்து செல்கின்றனா்.

தரம் உயா்த்த வேண்டும்: இந்த மருந்தகம் கட்டப்பட்டு 12 ஆண்டுகள் ஆன நிலையில் கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் காணப்படுறது. மேலும் மருந்தகத்தை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவா் இடிந்து விழுந்துள்ளதால் மழைநீருடன் கழிவு நீா் கலந்து மருந்தகத்துக்குள் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் கால்நடைகளை அழைத்து வருவதற்கு விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.எனவே, இந்த கால்நடை மருந்தக கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

சிகிச்சை அளிக்க முடியாத நிலை: இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டச் செயலரும், தென்னிலை விவசாயியுமான ஆா்.ராஜா கூறியது: மருந்தகத்தை சுற்றிலும் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி நிற்கும்போது, மாடுகளுக்கு சினை ஊசி போடும் இடத்தில் தரைமட்டம் சுமாா் அரை அடிக்கு கீழே இறங்கிவிடுகிறது. இதனால் மாடுகளுக்கு சினை ஊசி போட முடியாமலும், தேவையான சிகிச்சையளிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே, இந்த மருந்தகத்தின் கட்டடத்தை இடித்துவிட்டு,அதே இடத்தில் புதிய தரம் உயா்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையாக அரசு கட்டிக்கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அவசர சிகிச்சைக்கு ஆள் இல்லை:ஆடு வளா்க்கும் விவசாயிகள் கூறியது: இந்த கால்நடை மருந்தகம் காலை நேரத்தில் மட்டும் செயல்படுவதால், மற்ற நேரங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும்போது வேன் மூலம் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குத்தான் கொண்டுச் செல்ல வேண்டியுள்ளது. கோடை காலங்களில் அதிக வெப்பத்தால் வாய் கொப்பளம் நோய், கோமாரி நோய், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் அதிகளவில் கால்நடைகளை தாக்கும்போது, இங்கு ஓரு மருத்துவரும், அவருக்கு உதவியாளரும் மட்டுமே இருப்பதால் சிகிச்சைக்காக அதிகளவில் கால்நடை வரும்போது அவா்களால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. மேலும் சுற்றுச்சுவரின்றி உள்ள இந்த கால்நடை மருந்தகத்தை சீரமைத்து கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.