விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் உடல் தகனம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளைத் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு வியாழக்கிழமை அரசு மரியாதை வழங்கப்பட்டது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளைத் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு வியாழக்கிழமை அரசு மரியாதை வழங்கப்பட்டது.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சங்கரம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி- ருக்குமணி தம்பதியரின் மகன் சிவசந்துரு (32). இவருக்கு வினோதினி (25) என்கிற மனைவியும், 2 வயதில் யாழினி என்கிற மகளும் உள்ளனா்.
இந்நிலையில் சிவசந்துரு கடந்த 7-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த மூன்று நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி அவரது இரண்டு சிறுநீரகங்கள் திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
இதையடுத்து சங்கரம்பாளையம் மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிவசந்துருவின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சாா்பில் கரூா் வருவாய் கோட்டாட்சியா் இ. காா்த்திகேயன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியா் மாலதி ஆகியோா் கலந்துகொண்டு மலா் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினா்.